/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வருண பகவான் தருகிறார் 'வான் அமிர்தம்': வடிகட்டி அமைப்பு பொருத்தி குடிநீராக பருகலாம்
/
வருண பகவான் தருகிறார் 'வான் அமிர்தம்': வடிகட்டி அமைப்பு பொருத்தி குடிநீராக பருகலாம்
வருண பகவான் தருகிறார் 'வான் அமிர்தம்': வடிகட்டி அமைப்பு பொருத்தி குடிநீராக பருகலாம்
வருண பகவான் தருகிறார் 'வான் அமிர்தம்': வடிகட்டி அமைப்பு பொருத்தி குடிநீராக பருகலாம்
ADDED : அக் 25, 2024 10:04 PM

மழை காலங்களில் 'வான் அமிர்தம்' பொழிய ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பி நமக்கும், கால்நடைகளுக்கும் உணவு தேவையை பூர்த்தி செய்துவருகின்றன.
தற்போது பருவ மழைக்காலம் துவங்கியுள்ளது. தொடர்ந்து உருவாகும் புயல்கள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வாயிலாக நமக்கு நல்ல மழைப்பொழிவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
முந்தைய நாட்களில் மழை பெய்தாலே, அனைவரும் வீட்டு தோணியிலும், மொட்டை மாடியில் உள்ள மழை நீர் வடிகால் குழாய்களிலும், வரும் நீரை குடிப்பதற்காகவும், மற்ற வீட்டு தேவைகளுக்காகவும், பிடித்து சேகரிக்க தொடங்கி விடுவோம்.
பின்பு சில நாட்களுக்கு காய்ச்சி, வடிகட்டி குடிநீராக பயன்படுத்தி வந்தோம்; காலப்போக்கில் அந்த பழக்கம் மாறிப்போனது. பின்பு மழைநீர் செறிவூட்டல் தொட்டி அமைத்து, நிலத்தடி நீர்மட்டம் உயர சேமித்து வருகிறோம். இன்றைய நாட்களிலும் மொட்டை மாடியில் நேரடியாக விழும் மழை நீரை சேமித்து, பாதுகாத்து குடிநீராக பயன்படுத்தலாம்.
மிகச்சிறந்த சேகரிப்பு முறை!
கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க(காட்சியா) செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:
பொதுவாக நமக்கு கிடைக்கும் நீர், கனிமங்கள் கலந்த காரத்தன்மை கொண்ட நீராகவே இருக்கும். ஆனால், மழை நீரோ அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கும். அதன் பி.எச்., அளவு, 5.0 முதல் 5.5 இருக்கும். வளிமண்டல அழுக்குகள் கலந்ததாகவும் இருக்கும். ரசாயன புகை வெளியேற்றக்கூடிய ஆலைகள், அருகில் இல்லாத பகுதியாக இருந்தால் முறையாக சேமித்தால் குடிநீராக பயன்படுத்தலாம். இதற்கு மொட்டை மாடி வடிநீர் இணைப்பு குழாயில், தற்போது சந்தையில் கிடைக்கும் நல்ல வடிகட்டி அமைப்பை வாங்கி பொருத்தலாம். இது மொட்டை மாடி தளத்திலிருந்து வரும் துாசுகள், காய்ந்த சருகுகள், இலைகள் மற்றும் மண் முதலியவற்றை வடிகட்டி, நல்ல நீரை மட்டும் கீழே அனுப்பும்.
தரையில் மழைநீரை இரண்டாக பிரிக்கக்கூடிய வால்வு அமைத்து, முதலில் சில நிமிடங்களுக்கு வரும் மழை நீரை, மழைநீர் செறிவூட்டல் தொட்டிக்கு செலுத்தலாம். சில நிமிடங்களுக்கு பிறகு, நன்கு காற்று புகா வண்ணம் அமைக்கப்பட்டு சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும் மூடப்பட்ட நிலத்தடி சேமிப்பு தொட்டிக்கு திருப்பிவிட்டு, நன்கு சேமிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.