ADDED : செப் 12, 2026 01:28 AM

பொ துவாக வீடுகளில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வது தற்போது வழக்கமான நடைமுறையாக உள்ளது. இதில் வீட்டை பயன்படுத்தும் நிலையில் என்னென்ன வசதிகள் தேவைப்படும் என்பதை கருத்தில் வைத்து அறைகளை அமைக்க வேண்டும்.
குறிப்பாக, வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை, அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அறைகளில் வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக முதியோர், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பயன்பாட்டு நிலையில் பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்து கொள்வது கவனம் தேவை.
வீடுகளில் குளியலறை அமைப்பதில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். பெரும்பாலான வீடுகளில் பிரதான படுக்கை அறையின் இணைப்பாக குளியலறை அமைக்கப்படுவது தற்போது தவிர்க்க முடியாத வழக்கமாக மாறியுள்ளது.
இவ்வாறு அமைக்கும் போது, படுக்கை அறையின் தரைமட்டத்தைவிட, குளியலறையின் தரைமட்டம் உயரமாக இருக்கும் படி தான் பலரும் அமைக்கின்றனர். குளியலறையில் இருந்து தண்ணீர் வீட்டுக்குள் வந்து விடாமல் தடுப்பதாக நினைத்து இந்த வசதியை செய்கின்றனர்.
ஆனால், இவ்வாறு அரை அல்லது முக்கால் அடி உயரத்தில் குளியலறை அமைக்கும் போது, குழந்தைகள், முதியோர், மாற்று திறனாளிகளுக்கு பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, படுக்கை அறையில் தரைமட்டத்தைவிட, குளியலறையின் தரைமட்டம் சமநிலையில் அமைப்பது நல்லது.
குளியலறைக்கு கதவு அமைக்கும் இடத்தில், அரை அல்லது ஒரு அங்குலம் உயரத்துக்கு ஒரு தடுப்பு அமைத்தால் போதும், தண்ணீர் வெளியேறுவதை தடுக்கலாம். குளியலறையில் வாட்டர் ஹீட்டர் மட்டும் இருந்த காலம் தற்போது மாறிவிட்டது, ஷாம்ப், ேஹர் டிரையர் போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன.
குளியலறை கட்டும் போதே இந்த வசதிகளை பயன்படுத்துவதற்கான இடவசதியை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, குளியலறையில் இது போன்ற சாதனங்களை தண்ணீர் படாமல் வைப்பதற்கான இடத்தை சரியாக அமைக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
உங்கள் வீட்டு குளியலறையில், எதிர்பாராத காரணத்தால் தண்ணீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கான வழிமுறைகளையும் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும். குறிப்பாக, நவீன சாதனங்களை குளியலறையில் பயன்படுத்தும் போது உரிய பாதுகாப்பு, பராமரிப்பு வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
படுக்கை அறையின் தரைமட்டத்தைவிட, குளியலறையின் தரைமட்டம் உயரமாக இருக்கும் படி தான் பலரும் அமைக்கின்றனர், இதனால், முதியோர், குழந்தைகளுக்கு பயன்பாட்டின் போது பிரச்னை ஏற்படுகிறது.
