ADDED : செப் 12, 2026 01:28 AM

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று திட்டமிடுவோர் அதற்கான மொத்த தொகையையும் கையில் வைத்து இருப்பது என்பது தற்போது சாத்தியமில்லை. இதனால், மக்கள் வங்கிகளின் வீட்டுக்கடன் திட்டங்களை நம்பியே புதிய வீடு வாங்குகின்றனர்.
இவ்வாறு வங்கிகளில் வீட்டுக்கடன் பெறும் நிலையில் மக்கள் பல்வேறு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தற்போது சில கட்டுமான நிறுவனங்கள், தங்களுக்கு தெரிந்த வங்கிகளை வாடிக்கையாளர் வீட்டுக்கடன் பெற பரிந்துரைக்கின்றனர்.
அந்நிறுவனங்கள், வங்கிகளை வாடிக்கையாளருக்கு பரிந்துரைப்பது போன்று, வாடிக்கையாளரை வங்கிகளுக்கும் பரிந்துரைக்கின்றன. இதனால், பெரிய அளவில் ஆட்சேபங்கள் தெரிவிக்காமல் பல்வேறு வங்கிகள் வீட்டுக்கடன் கொடுக்க முன்வருகின்றன.
பொதுவாக, வீட்டுக்கடன் பெறும் நிலையில், கட்டுமான நிறுவனம் பரிந்துரைத்தது என்பதைவிட, அந்த குறிப்பிட்ட வங்கியின் நடைமுறைகள், வட்டி விகிதங்கள் உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்று பாருங்கள். குறிப்பாக, நீங்கள் வாங்கும் சொத்தின் மதிப்பில், எவ்வளவு பங்கு தொகையை கடனாக வழங்கும் என்று பாருங்கள்.
இதில் பொதுத்துறை வங்கிகளே மக்களின் முதல் தேர்வாக இருந்தாலும், தனியார் வங்கிகள் தான் பல்வேறு சலுகைகளுடன் வீட்டுக்கடன் கொடுக்கின்றன. வீட்டுக்கடன் கொடுக்கும் போது, விண்ணப்பதாரரின் மாத சம்பளம் அடிப்படையில் தான் தவணை தொகை நிர்ணயிக்கப்படும்.
இதன்படி, உங்களுக்கான வீட்டுக்கடன் மாத தவணை தொகை விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனால் தான், வங்கிகள் வீட்டுக்கடன் கொடுக்கும் நிலையில் வேறு கடன்கள் இருக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
வேறு கடன்களும் நிலுவையில் இருந்தால், வீட்டுக்கடன் தவணைக்கு மாத சம்பளத்தில், 50 சதவீத தொகை செல்லும் போது, பிற செலவுகளுக்கு பிரச்னை ஏற்படும். எனவே, வீட்டுக்கடன் வாங்குவதற்கான நடைமுறைகளில் இறங்கும் முன் வேறு பெரிய கடன்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான வங்கிகள் 'இசிஎஸ்' முறையில் மாத தவணைகளை தானியங்கி முறையில் குறிப்பிட்ட நாளில் எடுத்து கொள்ளும் நடைமுறையை பின்பற்றுகின்றன. எனவே, மாத தவணை நாளுக்கு முன், வங்கி கணக்கில் உரிய தொகை இருப்பு இருக்கிறதா என்று பாருங்கள்.
ஒரு முறை மாத தவணை தவறினாலும் அது பல்வேறு நிலைகளில் உங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக, சிபில் புள்ளிகளை கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது என்பதை மக்கள் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும் என்கின்றனர், ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
வங்கிகள் 'இசிஎஸ்' முறையில் மாத தவணைகளை தானியங்கி முறையில் குறிப்பிட்ட நாளில் எடுத்து கொள்ளும் என்பதால்,மாத தவணை நாளுக்கு முன் வங்கி கணக்கில் உரிய தொகை இருப்பு இருக்கிறதா என்று பாருங்கள்.
