/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டடத்தின் ஆயுளை தீர்மானிக்கும் 'மணல் துகள்'
/
கட்டடத்தின் ஆயுளை தீர்மானிக்கும் 'மணல் துகள்'
UPDATED : டிச 20, 2025 05:31 AM
ADDED : டிச 20, 2025 05:30 AM

ம ண்துகள்களே ஒரு கட்டடத்தின் பலம், நீடித்த தன்மை, வேலைசெய்யும் வசதியை தருகிறது. கான்கிரீட்டில், 40 முதல், 45 சதவீதம் பகுதியை மணல் நிரப்புகிறது.
மணல் தரம் தவறினால் எதிர்காலத்தில் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு(கிரிக்) செயலாளர் யுவராஜ்.
அவர் மேலும் கூறியதாவது:
மணலானது சிமென்ட் மற்றும் பெரிய ஜல்லி கற்களை ஒன்றிணைக்கும், பிணைப்பு சக்தியை அதிகரிக்கிறது. நல்ல மணல் பயன்படுத்தினால், கான்கிரீட்டின் அழுத்த வலிமை உயரும், மேற்பரப்பில் ஏற்படும் விரிசல்கள் குறையும், கட்டடம் நீண்ட ஆயுள் உடன் நின்றிருக்கும்.
இன்று கட்டுமானத்தில் பல வகை மணல்கள் பயன்பாட்டில் உள்ளன. நதிமணல் இயற்கையானது; மென்மையானது. ஆனால் தட்டுப்பாடு அதிகம்.
உற்பத்தி செய்யப்பட்ட மணல்(எம்.சாண்ட்) ஒரே மாதிரியான துகள்கள் இருக்கும். தரநிலை அதிகம்; நீடித்து கிடைக்கும். கிணறு மணலில் துகள்கள் கொஞ்சம் கடினம்; சுத்திகரிப்பு தேவையுள்ளது. கடல்மணலில் அதிக உப்புச் சத்து உள்ளது. கம்பி துருபிடிக்கும் அபாயம் அதிகம்.
சிறந்த மணலை தேர்வு செய்வது அவசியம்.நிறமானது, இளஞ்சாம்பல் அல்லது இளநிற பச்சையாக இருப்பின் நல்ல தரம் எனலாம். கரும் நிறம், சிவப்பு, மண் நிறம் என்றால் களிமண், வண்டல் அதிகம்.
சிறந்த மணலில் மண் படலம் 5 சதவீதத்துக்கு கீழ் மட்டுமே இருக்கும். துகள்களின் அளவீடானது ஐ.எஸ்., 383:2016ன் படி ஜோன் II/ஜோன் III கான்கிரீட்டுக்கு சிறந்தது. மணலின் தரம் சரியாக இல்லையெனில், கட்டடத்தில் பல தீவிரமான பிரச்னைகள் உருவாகலாம்.
சுவர்கள் மற்றும் அடித்தளங்களில் விரிசல்கள் உருவாகும். கட்டடத்தின் அழுத்தம் தாங்கும் திறன் குறையும். டைல்ஸ், பிளாஸ்டர், சாயல் போன்றவை முறையாக ஒட்டாது. ஈரப்பதம் அதிகரித்து சுவர்களில் ஈரத்தன்மை தோன்றும்.
மணல் என்பது சிலிகா துகள்களால் ஆன, ஒரு எளிய கற்கள் சேர்க்கை என்றாலும், ஒரு வீட்டின் பலம், பாதுகாப்பு, நீடித்த தன்மை, எல்லாவற்றுக்கும் காரணம் அதுவே. ஒரு வீட்டின் கான்கிரீட் கலவையில் மணல், 30-40 சதவீதம் இருப்பதால், அதன் தரநிலையே கட்டடத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

