/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீட்டுக்கு பொருத்தமான வண்ணங்களை தேர்வு செய்யும் எளிய வழிமுறைகள் !
/
வீட்டுக்கு பொருத்தமான வண்ணங்களை தேர்வு செய்யும் எளிய வழிமுறைகள் !
வீட்டுக்கு பொருத்தமான வண்ணங்களை தேர்வு செய்யும் எளிய வழிமுறைகள் !
வீட்டுக்கு பொருத்தமான வண்ணங்களை தேர்வு செய்யும் எளிய வழிமுறைகள் !
ADDED : மே 10, 2025 07:37 AM

சொந்தமாக வீடு கட்டினாலும், வாங்கினாலும் அதன் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் தான் பெரும்பாலான மக்கள் கவனம் செலுத்துகின்றனர். எனது வீட்டில் அனைத்து அறைகளும் இந்த குறிப்பிட்ட வண்ணத்தில் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருக்கும்.
இதன் அடிப்படையிலேயே அவர்கள் புதிய வீட்டுக்கான வண்ணங்களை தேர்வு செய்வதை பார்த்து இருப்போம். ஆனால், நமக்கு பிடித்தது என்பதை கடந்து, எந்த அறைக்கு எத்தகைய வண்ணம் பொருத்தமாக இருக்கும் என்பதை சரியாக தேர்வு செய்வது அவசியம்.
எனக்கு பிடிக்கும் என்ற ஒரே காரணத்தை வைத்து வீட்டுக்கான வண்ணங்களை தேர்வு செய்தால், பல்வேறு நடைமுறை பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரு வீட்டை கட்டினால் அதில் எந்த அறையில் என்ன வண்ணம் அடிக்க வேண்டும் என்பதை வரைபட தயாரிப்பு நிலையிலேயே முடிவு செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
புதிய வீட்டுக்கான கட்டட வரைபடம் தயாரித்தவுடன் அதன் விபரங்களை கணினியில் உள்ளீடு செய்து 3டி முறையில் வீட்டின் தோற்றம் சரிபார்க்கப்படும். இதில், வீட்டின் ஒவ்வொரு பாகமும், கட்டி முடித்த பின் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்புஏற்படுகிறது.
அதே நேரத்தில் வீட்டின் எந்த பாகத்துக்கு, என்ன வண்ணம் அடித்தால் சரியாக இருக்கும் என்பதையும் இதில் வெள்ளோட்டம் பார்க்க முடியும். புதிய வீட்டில் ஒரு வண்ணத்தை தேர்வு செய்து அதையே அனைத்து பகுதிகளுக்கும் அடிப்பது என்ற வழக்கம் இன்னும் பலரிடம் காணப்படுகிறது.
இதில் நடைமுறை எதார்த்த நிலவரத்தை புரிந்து கொண்டு, ஒரு வண்ணத்தை தேர்வு செய்தாலும் அதன் பல்வேறு வகைகளில் வேறுபடுத்தி பயன்படுத்தும் வழிமுறைகள் வந்துள்ளன. உதாரணமாக, பச்சை நிறத்தை பிரதானமாக நீங்கள் தேர்வு செய்தால் அதன் வெளிர் வண்ணம் என்ற அடிப்படையில் நான்கு, ஐந்து ஷேட்கள் தற்போது கிடைக்கின்றன.
இதை சரியாக தேர்வு செய்து பயன்படுத்தினால் ஒரே வண்ணத்தை நீங்கள் பயன்படுத்தி வீட்டை வெவ்வேறு வகைகளில் அலங்கரிக்கலாம். இதில் ஒரு வண்ணத்துக்கு பதில் இரண்டு வண்ணங்களை தேர்வு செய்யும் போதும், அதன் பல்வேறு சிறப்பு ஷேட்களை பயன்படுத்தும் போது வீட்டின் உட்புற தோற்றம் அழகாக மாறிவிடும்.
நீங்கள் உங்கள் வீட்டுக்கு என்ன வண்ணத்தை தேர்வு செய்தாலும் அதன் அடர் மற்றும் வெளிர் நிலையில் கிடைக்கும் பல்வேறு ஷேட்களை சரியாக திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். இதன் வாயிலாக அதிக வண்ணங்களை வாங்காமல், குறைவான வண்ணங்களை பயன்படுத்தி வீட்டின் தோற்றத்தை எளிய முறையில் அழகாக மாற்றலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.