/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
அஸ்திவாரத்தில் இருக்கிறது கட்டட உறுதியின் ரகசியம்
/
அஸ்திவாரத்தில் இருக்கிறது கட்டட உறுதியின் ரகசியம்
ADDED : ஜூலை 25, 2025 09:04 PM

ஒ ரு கட்டடத்தின் உறுதியும் நீடித்த பயன்பாடும் எங்கே துவங்குகிறது என்று கேட்டால், துாண்கள், சுவர் அல்லது கான்கிரீட் தரம் என்பார்கள். உண்மையில் அந்த கட்டடத்தின் வாழ்க்கைக் காலத்தை தீர்மானிப்பது அடித்தள பணிகள்தான் என்கிறார் கோவை மண்டல கட்டடப் பொறியாளர்கள் சங்க(கொஜினா) துணைத் தலைவர் தமோதரசாமி.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது:
அடித்தளத்திற்கான மண் பரிசோதனை என்பது முதல் கட்டமாக அமைகிறது. பாதுகாப்பான தாங்கும் திறன்(எஸ்.பி.சி.,), நீர்தாரை நிலை, மண் வகை போன்றவை ஆய்வு செய்யப்படாமல் எந்தக் கட்டுமானமும் துவங்கக் கூடாது. ஒருமுறை, ஒரு திட்டத்தில் எஸ்.பி.சி., தவறாக மதிப்பீடு செய்யப்பட்டதால், பைலிங் மாற்றமாக செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது செலவு உயர்வு மட்டுமல்ல; திட்டத்தில் தாமதத்தையும் ஏற்படுத்தியது.எனவே, இப்பரிசோதனையை அவசியமாக மேற்கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் பொக்லைன் போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி மண் அகழ்வு செய்வது வழக்கமாகி விட்டது. இது நமக்கு நேரமும் பணமும் சேமிக்க உதவுகிறது.
குறிப்பாக, மென்மையான நிலங்களில் 'பைலிங்' முறை பயன்படுத்தப்படுகிறது. 'போர்டு பைல்' அல்லது 'டிரிவன் பைல்' ஆகியவை நம்பகமான தீர்வாக இருக்கின்றன. இன்னொரு பயனுள்ள அடித்தள வடிவம் 'ராப்ட் பவுண்டேஷன்'. இதுஎஸ்.பி.சி., குறைவாக இருக்கும் இடங்களில் மிகவும் பொருத்தமானது.
ஒரு திட்டத்தில் சீரற்ற அடித்தளம் ஏற்படாமல் தடுக்க இந்த 'ராப்ட் ஸ்லாப்' ஒரு தீர்வாக இருந்தது. பணியில் 'ரெடி மிக்ஸ் கான்கிரீட்' பயன்படுத்துவது மிகுந்த நன்மை தருகிறது. இதனுடன் தொடர்புடைய 'ஸ்லம்ப் டெஸ்ட்', 'கியூப் ஸ்டிரென்த் டெஸ்ட்' போன்றவையும் தவறாமல் செய்யப்பட வேண்டும்.
மண் அகழ்வின் போது பக்க சுவர்கள் இடிந்து விழாதபடி 'ஸ்லோப்' அமைக்க வேண்டும்.
மழைநீர் தேங்காமலும் இருக்க தற்காலிக வடிகால் ஏற்பாடுகள் அவசியம். மண் பரிசோதனை கருவிகள், கான்கிரீட் ஸ்கேனர் போன்றவற்றின் பயன்களை இன்றைய இளைஞர்கள் பூரணமாக பயன்படுத்த வேண்டும். கட்டுமான தரத்தை உயர்த்த அடித்தள பணிகளை நவீன முறைகளில் துல்லியமாக செய்ய வேண்டியது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.