/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
மனைக்கு குறுக்கே மின்கம்பம் இருக்கிறது; என்ன செய்வது?
/
மனைக்கு குறுக்கே மின்கம்பம் இருக்கிறது; என்ன செய்வது?
மனைக்கு குறுக்கே மின்கம்பம் இருக்கிறது; என்ன செய்வது?
மனைக்கு குறுக்கே மின்கம்பம் இருக்கிறது; என்ன செய்வது?
ADDED : மே 27, 2025 07:31 AM

நாங்கள் அபார்ட்மென்ட் வீடு வாங்கி, 15 ஆண்டு ஆகிறது. தற்போது, ஜன்னல் அலுமினியம் 'பிரேம் ஸ்லைடு' கண்ணாடிகள் இறுகி, எதுவும் திறக்க முடியாத நிலையில் உள்ளது. இதை சரி செய்ய ஏதாவது வழி உள்ளதா?
-சந்திரா, கோவை.
அலுமினியம் ஜன்னல் பிரேம் ஸ்லைடு கண்ணாடிகள் நீண்ட நாட்கள் ஆன பிறகு, குப்பை சேர்ந்தும், மழை நீரும் சேர்ந்து துருப்பிடித்து, திறக்க முடியாத நிலை உருவாகிவிடும். எனவே, இதை புதிதாக மாற்றுவதே நல்லது. யு.பி.வி.சி., ஜன்னல் பயன்படுத்துவது நன்று.
எங்களது வீட்டின் துாண்களில், விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண ஏதேனும் அமிலம் உள்ளதா?
-சக்தி, கோவை.
முதலில் கிராக் ஆன இடத்தில், விரிசலை நிரப்பும் பேஸ்ட் இரண்டு கோட் அடித்து காய்ந்தவுடன், வாட்டர் புரூப் பெயின்ட் அடிக்க வேண்டும். இது நீண்ட காலத்திற்கு பயன் தரும்.
நான் புறநகரில் வாங்கி போட்ட மனையை, அடிக்கடி சென்று பார்த்துக்கொள்ள வேண்டுமா?
-பாலு, ஒண்டிப்புதுார்.
கண்டிப்பாக பார்க்க வேண்டும். என் நண்பர் ஒருவர் இப்படித்தான் மனை வாங்கி போட்டு விட்டு, சில வருடம் கழித்து வாடகை கிடைக்கும் என்ற எண்ணத்தில், கார்களை பொதுப்பார்க்கிங் செய்யும் வசதி ஏற்படுத்தினார். சிறிது நாட்களுக்கு பிறகு மனையை சென்று பார்க்க அதிர்ந்து போனார். ஏனெனில் ஊரில் உள்ள குப்பை எல்லாம், அவர் பிளாட்டில் தான் கிடந்தன. ரூ.60 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்த பிறகுதான், மனை ஓரளவு சுத்தமானது.
புதிதாக வீடு கட்ட உள்ளோம்; 30 அடி முகப்பு உடைய எங்கள் மனைக்கு குறுக்கே பெரிய மின்சார கம்பம் இடையூறாக உள்ளது. கம்பத்தை இடமாற்றி வைக்க, முறையாக விண்ணப்பிப்பது எப்படி?
-சென்னியப்பன், நஞ்சுண்டாபுரம்.
இது எளிதான வேலை தான். அருகில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய இடத்தினுடைய விவரங்கள், பிளான், அப்ரூவல்கள் போன்றவற்றை, தாங்கள் தெரிவிக்க வேண்டும். ஒரு விண்ணப்பம் தயாரித்து, அங்கே உள்ள அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்தீர்கள் என்றால், மின் நிர்வாகமே சில சமயங்களில் இவற்றை மாற்றித் தருகிறார்கள். போக்குவரத்து போன்ற செலவுகள் மட்டும் தான் தங்களுக்கு ஏற்படும்.
எங்களது வீடு கட்ட ஆரம்பித்து, ஆறு மாதங்கள் வரை வேலை நடந்தது. பிளிந்த், பீம் வரை கட்டடம் வந்துள்ளது. நிதிச்சுமை காரணமாக, இரு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் துவக்க உள்ளோம்; ஆலோசனை கூற முடியுமா?
-மாரிமுத்து, துடியலுார்.
பொதுவாக கட்டுமான காலகட்டங்களில், கம்பிகளில் லேசான துருப்பிடித்தல் என்பது இருக்கும். அவற்றை நீங்கள் ஓரிரு மாதங்கள் பயன்படுத்தும் பட்சத்தில், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் கட்டுமான காலம் குறிப்பிட நேரத்தில் முடியவில்லை என்றால், 'ஆன்டி கரோஷன்' பயன்படுத்தி கம்பிகளை, பாதுகாப்பு செய்து பயன்படுத்தும்பொழுது, எதிர்காலத்தில் நீடித்த உழைப்பு கிடைக்கப்பெறும்.
கோவையில் ஒரு பிரபல கல்லுாரியில், பி.இ., சிவில் இன்ஜி., படித்து வருகிறேன். படிப்பு முடிந்த உடனேயே ஏதேனும், ஒரு கட்டுமான நிறுவனத்தில், சைட் சூப்பர்வைசராக பணிபுரிய வேண்டும் என்று, ஆசிரியர்கள் கூறுகிறார்கள். வேறு 'ஆப்ஷன்' இல்லையா?
-கோபால், கோவை.
பி.இ., சிவில் இன்ஜினியரிங் முடித்தால், சைட் சூப்பர்வைசராகத்தான் போக வேண்டும் என்பதில்லை. தவிர, பல்வேறு விதமான வாய்ப்புகள், சிவில் கட்டுமான துறையில் உள்ளன. 'வேல்யூஷன்' கட்டடங்களுக்கு போனால், மதிப்பீட்டாளரிடம் உதவியாளராக சேரலாம். 'பிளானிங் டிசைனிங் எஸ்டிமேஷன் ஒர்க்' போன்ற நிறுவனங்களில், குறிப்பிட்ட அந்த துறையில் உதவியாளராக சேரலாம்.
சர்வே ஒர்க் மற்றும் டிஜிட்டல் சர்வே டிரோன் சர்வே போன்ற சர்வே நிறுவனத்தில் பணியாற்றி, அந்தத் துறையில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். கவர்மென்ட் கன்ஸ்ட்ரக் ஷன், பிரிட்ஜ் ரோடு ஒர்க் போன்றவற்றில், எஸ்டிமேஷன் மற்றும் சூப்பர்வைசர், இதில் ஏதாவது ஒன்றில் பணி புரியலாம்.
- பொறியாளர் ஜோசப், தலைவர்,
அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம்,
கோவை மையம்.