/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
மனதார கட்ட வேண்டும்...மழை நீர் சேகரிப்பு தொட்டி
/
மனதார கட்ட வேண்டும்...மழை நீர் சேகரிப்பு தொட்டி
ADDED : பிப் 15, 2025 08:15 AM

நாம் அமைக்கும் அனைத்து விதமான கட்டுமானங்களுக்கும், மழை நீரை முறையாக பூமிக்குள் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும்.
மழைநீர் சேமிப்பை, நமது முக்கியமான அத்தியாவசிய கடமையாக அனைவரும் செய்து, நமக்கும், நம் எதிர்கால சந்ததிகளுக்கும் உதவ வேண்டும். மழைநீர் சேமிப்பு என்பது, அனைவரும் நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு சாத்தியமான மற்றும் மிக எளிமையான நடைமுறையாகும்.
மழைநீர் சேமிப்பு இன்று பெயரளவில், அரசாங்க ஒப்புதலுக்காக மட்டுமே, பெரும்பாலான கட்டடங்களில் அமைக்கப்படுகிறது.
அவ்வாறு இல்லாமல், முறையாக அமைத்து அதனை சரியாக பராமரிக்க வேண்டும். எந்தவொரு சேமிப்பும் விலைமதிப்பற்றது; அதுபோலவே, வான் நீரான மழை நீரை சேமித்து, பூமியை காப்பாற்றுவது நமது ஒவ்வொருவரின் கடமையாக கருத வேண்டும்.
'காட்சியா' உறுப்பினர் சேனாதிபதி கூறியதாவது:
மழை நீரை நமது திறந்தவெளி மற்றும் மொட்டைமாடி பகுதிகளில், மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை குழாய்கள் மூலம் முறையாக, மழை நீர் தொட்டியை சென்றடையுமாறு அமைக்க வேண்டும். மழை நீர் தொட்டி, சுவராகவோ அல்லது 'ரெடிமேட்' வளையங்களாகவோ கட்டடத்தின் சுவரிலிருந்து சிறிது தள்ளி அமைத்திட வேண்டும்.
அவ்வாறு அமைக்கும்போது, அவரவர் வீடுகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப குறைந்தபட்சம், 3 அடி அகலம் முதல், 5 அடி ஆழம் வரையும், இடவசதியை பொறுத்து, 8 அடி அகலம் மற்றும், 10 அடி ஆழம் வரையும் அமைத்து, அதனுள் பாதிக்கு மேல் கருங்கல் மற்றும் உடைந்த செங்கற்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும். மேற்கொண்டு சிறிய கற்கள் அல்லது மணல் கொண்டு நிரப்ப வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பூமி வெப்பம் ஆகுதல் மற்றும் குடிநீர் தட்டுப்பாடுகளை குறைத்திட அனைவரும் மழைநீர் தொட்டி அமைத்திட வேண்டும். ஏற்கனவே அமைத்த தொட்டியினை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

