/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கழிவு நீர் வடிகால் வசதிகளை பார்க்காமல் வீடு வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
/
கழிவு நீர் வடிகால் வசதிகளை பார்க்காமல் வீடு வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
கழிவு நீர் வடிகால் வசதிகளை பார்க்காமல் வீடு வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
கழிவு நீர் வடிகால் வசதிகளை பார்க்காமல் வீடு வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ADDED : நவ 25, 2024 10:04 AM

புதிதாக வீடு வாங்க வேண்டும் என்று நினைப்போர், அடுக்குமாடி திட்டங்களை தான் பெரும்பாலும் நாடுகின்றனர். அனைத்து வகையான வசதிகளையும் ஒரே வளாகத்தில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்பதால் இது விஷயத்தில் மக்கள் மத்தியில் ஈர்ப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, கேட்டட் கம்யூனிட்டி என்று கூறப்படும் குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இந்நிலையில், கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்குவோர், அடிப்படை வசதிகள் தொடர்பாக குறிப்பிட்ட சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
இன்றைய சூழலில், பெரிய கட்டுமான நிறுவனங்கள் கேட்டட் கம்யூனிட்டி முறையிலான குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துகின்றன. இத்தகைய திட்டங்களை தேர்வு செய்யும் போது அதில் முழுமையும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக உள்ளதா, வணிக பயன்பாட்டுக்கு ஏதாவது பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
முழுமையும் குடியிருப்பு உபயோக வகைபாட்டில் அந்த நிலம் இருந்தால், அது அங்கு வீடு வாங்குவோருக்கு கூடுதல் பாதுகாப்பை கொடுக்கும். அந்த குடியிருப்பு அமைந்துள்ள நிலம் கலப்பு பயன்பாட்டின் கீழ் வகைபடுத்தப்பட்டிருந்தால், வணிக ரீதியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
வணிக ரீதியான பயன்பாடு அனுமதிக்கப்படுவதால் என்ன பாதிப்பு வந்துவிட போகிறது என்ற அடிப்படையில் மக்களிடம் கேள்வி எழலாம். ஆனால், வணிக பயன்பாட்டின் காரணமாக சில கூடுதல் வசதிகள் நமக்குகிடைக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றாலும், அதனால் கூட்ட நெரிசல், வாகன நெரிசல் போன்ற பிரச்னைகள் வரும்.
இது ஒரு பக்கம் என்றாலும், நீங்கள் வீடு வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் தண்ணீர் வழங்கலுக்கு என்ன வசதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆரம்ப நிலையிலேயே விசாரிக்க வேண்டும். அங்கு மொத்த மக்கள் தொகை என்ன, அதன் தினசரி தண்ணீர் தேவை என்ன, அதற்கான ஆதாரங்கள் என்ன என்பது போன்ற விஷயங்களை பார்க்க வேண்டும்.
இதே போன்று, அந்த வளாகத்தில் தினசரி வெளியேற்றப்படும் கழிவு நீரின் அளவு என்ன, அதை சுத்திகரிக்க கட்டுமான நிறுவனம் என்ன ஏற்பாடு செய்துள்ளது என்பதையும் விசாரிப்பது அவசியம். குறிப்பாக, கழிவு நீர் சுத்திகளிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அதன் பராமரிப்பு செலவுகள் என்ன என்பதையும் பார்க்க வேண்டும்.
பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவு நீர் சுத்திகரிப்புக்கான வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும், சுத்திகரிக்கப்பட்ட நீரை என்ன செய்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. இதில் குறிப்பிட்ட அளவு நீரை மட்டுமே மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும் என்பதில் எதார்த்த நிலையை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
கழிவு நீர் வடிகால் விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டால், அதன் பாதிப்புகளை வீடு வாங்குவோர் தான் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, வீடு வாங்கும் நிலையிலேயே இது போன்ற விபரங்களை தெளிவாக விசாரிப்பது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.