/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
பட்டா விபரங்களை சரி பார்ப்பதில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
/
பட்டா விபரங்களை சரி பார்ப்பதில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
பட்டா விபரங்களை சரி பார்ப்பதில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
பட்டா விபரங்களை சரி பார்ப்பதில் ஏற்படும் குறைபாடுகள் என்ன?
ADDED : ஜூலை 19, 2025 12:26 AM

வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவது என்பது பெரும்பாலான குடும்பங்களுக்கு வாழ்நாள் லட்சியமாக இருக்கிறது. இதற்காக, வாழ்நாள் சேமிப்பு வாயிலாக திரட்டப்பட்ட தொகை மட்டுமல்லாது, அடுத்த, 20 ஆண்டுகளுக்கான வருமானத்தையும் செலவிடும் அளவுக்கு மக்கள் செல்கின்றனர்.
ஒவ்வொருவருக்கும் இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன், அதற்கான பாதுகாப்பை உறுதி செய்வது மிக மிக அவசியம். குறிப்பாக, போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் வாயிலாக சொத்து விற்பனை மோசடியில் ஈடுபடும் கும்பல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளன.
சொத்து ஆவணங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தான், இது போன்ற மோசடி வலையில் சிக்குகின்றனர் என்ற எண்ணம் தான் பரவலாக காணப்படுகிறது. ஆனால், சொத்து மோசடியாளர்களிடம், அரசு அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை பலரும் சிக்கி பாதிக்கப்படுவதை சமீப காலமாக பார்க்க முடிகிறது.
சொத்து விற்பனையில் மோசடியை தடுக்க அரசு பல்வேறு சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இதில் மோசடி குறைந்தபாடில்லை. இந்நிலையில், நீங்கள் புதிதாக சொத்து வாங்கும் போது, அதில் பத்திரம் தொடர்பான உண்மை நிலவரத்தை முழுமையாக அறிந்துவிட்டோம் என்று அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கிவிடாதீர்கள்.
வீடு, மனை போன்ற சொத்துக்களுக்கு பத்திரம் சார்ந்த விஷயங்களில் வில்லங்கம் எதுவும் இல்லாவிட்டாலும், பட்டா சார்ந்த பல்வேறு வில்லங்கம் தலைதுாக்குகின்றன. நீங்கள் வாங்கும் சொத்து பத்திர ரீதியாக வில்லங்கம் எதுவும் இல்லாத நிலையில், பட்டாவின் அசல் பிரதியையும், அதற்கு உரிய நில அளவை வரைபடத்தையும் கேட்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு பட்டா இருக்கிறது என்றால், அதற்கு உரிய நில அளவை வரைபடம் தயாரித்து வழங்கப்பட்டு இருக்கும். பொதுவாக, நிலம் தொடர்பான பட்டாக்களில் உரிமையாளர் பெயர், சர்வே எண், பரப்பளவு, வகைபாடு போன்ற விபரங்கள் தான் இடம் பெறுகிறது என்பதை பரவலாக பார்த்து இருப்போம்.
அதில் குறிப்பிடப்பட்ட சர்வே எண், பரப்பளவு ஆகியவற்றை தெளிவாக புரிந்து கொள்ள, நில அளவை வரைபடம் அவசிய தேவையாக உள்ளது. இந்த வரைபடம் இன்றி வெறும் பட்டாவை மட்டும் பார்ப்பதால், எந்த பயனும் இல்லை என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போதைய சூழலில் சர்வே எண் மற்றும் உட்பிரிவு வாரியாக வழங்கப்படும் பட்டாக்களுக்கு இணையாக, நில அளவை வரைபடமும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு இணையதளத்தில் நில அளவை வரைபடம் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலரை அணுகினால், இந்த வரைபடம் கிடைக்கும்.
பட்டாவுடன் இணையாக நில அளவை வரைபடத்தை ஆய்வு செய்யும் போது தான், அந்த சொத்தின் நான்கு பக்கமும் உள்ள பிற சொத்துக்கள் குறித்து தெரியவரும். இதில் காணப்படும் நான்கு எல்லைகள், பரப்பளவு ஆகிய விபரங்களை பத்திரத்துடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டியது அவசியம் என்கின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.