/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
மனை அளவை சரி பார்க்காமல் வீடு கட்டியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
/
மனை அளவை சரி பார்க்காமல் வீடு கட்டியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
மனை அளவை சரி பார்க்காமல் வீடு கட்டியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
மனை அளவை சரி பார்க்காமல் வீடு கட்டியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
ADDED : ஜூலை 12, 2025 06:49 AM

சென்னை போன்ற நகரங்களில் அடுக்குமாடி திட்டங்களில் வீடுகளின் விலை வெகுவாக உயர்ந்து வரும் நிலையில் நடுத்தர, குறைந்த வருவாய் பிரிவினர் பரிதவிக்கின்றனர். இதனால், நகரின் மையப்பகுதியில் வீடு வாங்குவதைவிட, 50 அல்லது, 60 கி.மீ., சுற்றளவுக்குள் நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறமக்கள் விரும்புகின்றனர்.
மக்களின் இத்தகைய விருப்பத்தை புரிந்து கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. உண்மையில் இது போன்ற திட்டங்கள் மக்களின் கனவு இல்லம் என்ற ஆசையை பூர்த்தி செய்வதில்பேருதவியாக அமைந்துள்ளனஎன்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதே நேரம், இது போன்ற திட்டங்களில் மனை வாங்குவது முதல் அதில் வீடு கட்டும் வரை ஒவ்வொரு விஷயத்திலும் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, அடுத்த சில ஆண்டுகளில் வீடு கட்டி குடியேறுவது என்ற நோக்கத்தில் மனை வாங்குவோர் தேர்வு நிலையில் இருந்தே மிக கவனமாக செயல்பட வேண்டும்.
தற்போது பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முறையான அங்கீகாரத்துடன் மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதனால், அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கி ஏமாறுவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மனையை பயன்படுத்தும் நிலையில் புதிய பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விற்பனையை துவக்கும் நிலையில் மனையின் எல்லைகளை தெளிவாக வரையறுத்து அடையாளத்துக்கு கற்கள் அமைக்கின்றன. ஆனால், இதில், காலி மனையை வாங்கிய நிலையில் மக்கள் அந்த நிலத்தை உடனடியாக பயன்படுத்தாத நிலையில், உள்ளூர் மக்கள் அத்துமீறலால் அடையாள கற்கள் காணாமல் போகின்றன.
இப்படி அடையாள கற்கள் காணாமல் போன நிலையில், அங்கு வீடு கட்டுவதற்கான பணிகளை துவக்கும் நிலையில் மக்கள்மீண்டும் எல்லையை வரையறுக்க வேண்டும். எல்லையை அடையாளப்படுத்தும் கற்கள் காணாமல் போவது, புதர்கள் அதிகரிப்புகாரணமாக, எல்லை கோடு தெரியாமல் மக்கள் வீடு கட்டும் பணிகளை துவக்கி விடுகின்றனர்.
இவ்வாறு வீடு கட்டும்பணிகளை துவக்கும் போது, பத்திரம், நில அளவை வரைபடத்தில் உள்ள அளவுகள் அடிப்படையில் எல்லையை துல்லியமாக சரி பார்க்காமல் பணிகளை மக்கள் துவக்குகின்றனர். இதன் காரணமாக, வீட்டுக்கான போர்வெல், துாண்கள் அமைப்பதில் பல்வேறு புதிய பிரச்னைகள் வருகின்றன.
உத்தேசமாக எல்லையை தெரிந்து வீடு கட்டும் பணிகளை துவக்கும் போது, போர்வெல், அஸ்திவார துாண்கள் அடுத்தவர் நிலத்தில் அமைய வாய்ப்புகள் உள்ளன. சிறிய அளவில் ஏற்படும் கூடுதல் செலவை பார்க்காமல், வரைபடம் தயாரிக்கும் முன், மனையின் எல்லைகளை சரி பார்ப்பது அவசியம்.
அப்போது தான் கட்டுமான பணிகளை துவக்கிய நிலையில் எல்லை தொடர்பான பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க முடியும். இது விஷயத்தில் முறையாக செயல்பட வேண்டும் என்பதில் அலட்சியம் காட்ட கூடாது என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.