/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமான கம்பியில் துரு ஏற்பட்டால் அகற்றுவதற்கான வழிமுறைகள் என்ன?
/
கட்டுமான கம்பியில் துரு ஏற்பட்டால் அகற்றுவதற்கான வழிமுறைகள் என்ன?
கட்டுமான கம்பியில் துரு ஏற்பட்டால் அகற்றுவதற்கான வழிமுறைகள் என்ன?
கட்டுமான கம்பியில் துரு ஏற்பட்டால் அகற்றுவதற்கான வழிமுறைகள் என்ன?
ADDED : மே 02, 2025 09:44 PM

பொதுவாக வீடு கட்டுவதில் டி.எம்.டி., கம்பிகள், கான்கிரீட் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு பொருளையும் தரமானதாக வாங்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றாலும், அதற்கான வழிமுறைகள் தெரிவதில்லை.
கான்கிரீட் கட்டடங்களுக்கு அதில் பயன்படுத்தப்படும் டி.எம்.டி., கம்பிகளின் தரம் தான் பிரதானமாக இருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கு கட்டட அமைப்பியல் பொறியாளர் பரிந்துரை அடிப்படையில் சரியான வகை கம்பிகளை கவனமாக தேர்வு செய்து வாங்க வேண்டும்.
இதில் உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு அனுப்பப்படும் கம்பி எப்போது தயாரிக்கப்பட்டது, டீலரிடம் எவ்வளவு நாட்களாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். தயாரிக்கப்பட்டு அதிக மாதங்கள் இருப்பு வைக்கப்பட்ட கம்பி என்றால் அதில் துரு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
குறிப்பாக, சில இடங்களில் சரியாக திட்டமிட்டு, பணத்தை ஏற்பாடு செய்து வீடு கட்டும் பணிகளை துவக்கி இருப்பார்கள். ஆனால், அஸ்திவாரம், பிளிந்த் பீம் அமைத்த நிலையில் பணிகளை தொடர முடியாத அளவுக்கு எதிர்பாராத வகையில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம்.
இதனால், தொடர்ந்து சில மாதங்களுக்கு கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கம்பிகளில் ஈரக்காற்று பட்டு துரு ஏற்பட்டு இருக்கலாம். இவ்வாறு வெளிப்புற ஈரக்காற்றால் துரு ஏற்பட்ட கம்பிகளில், கட்டுமான பணிகளை அப்படியே தொடர கூடாது.
இது போன்ற சமயங்களில் கம்பிகளில் ஏற்பட்ட துரு போன்றபாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அவசியம். தற்போதைய சூழலில், பிரபலமான பெயின்ட் தயாரிப்பு நிறுவனங்களும் துரு தடுப்பு கோட்டிங் தயாரிப்பில் ஈடுபடுகின்றன.
இது போன்ற துரு தடுப்பு கோட்டிங் கலவைகளை வாங்கி பெயின்ட் அடிப்பதற்கான பிரஷ்களை பயன்படுத்தி கம்பிகளில் பூச வேண்டும். குறிப்பாக, கட்டுமான பணிகளை நிறுத்தும் சமயத்தில் இந்த கலவைகளை பயன்படுத்தினால், பணி நடக்காத காலத்தில் துரு பாதிப்புகளை தடுக்கலாம்.
இந்த விஷயத்தில் வீடு கட்டுவோர் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும். கட்டுமான பணிகளை நிறுத்தும் நிலையில் மட்டுமல்லாது, பணிகளை மீண்டும் துவக்கும் போதும் துரு தொடர்பான பிரச்னைகளை தீர்க்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

