/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமான பணியில் முறையான பினிஷிங் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்!
/
கட்டுமான பணியில் முறையான பினிஷிங் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்!
கட்டுமான பணியில் முறையான பினிஷிங் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்!
கட்டுமான பணியில் முறையான பினிஷிங் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்!
ADDED : ஜூலை 04, 2025 11:53 PM

புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் முறையாக, தரமாக அமைய வேண்டும் என்று தான் அனைவரும்விரும்புகின்றனர். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு இதற்கான சரியான வழிமுறைகள் தெரியாததால், கட்டுமான பணிகளில் தரம் சார்ந்த குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பதை பரவலாக பார்க்க முடிகிறது.
தமிழகத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் பொறியாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களை தான் மக்கள் நேரடியாக அணுகுகின்றனர். இதில் உள்ளூர் அளவில் அறிமுகமான நபர்களுக்கு தான் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் அளிப்பதில் முன்னுரிமை அளிப்பதை பார்க்க முடிகிறது.
பெரிய நிறுவனங்கள், பிரபலமான நிறுவனங்கள் போன்றவற்றை அணுகினால், கட்டுமான செலவு வெகுவாக அதிகரிக்கும் என்ற எண்ணம் உள்ளது. இவ்வாறு உள்ளூர் அளவில் ஒரு ஒப்பந்ததாரரை தேர்வு செய்கையில் அவர் இதற்கு முன் மேற்கொண்ட கட்டுமான திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்த விஷயங்களை தெரிவியுங்கள்.
சில சமயங்களில் இதுவரை எவ்வித பிரச்னையும் இன்றி கட்டுமான திட்டங்களை நிறைவேற்றிய ஒப்பந்ததாரர், உங்கள் வீட்டுக்கான பணியின் போது எதிர்பாராத வகையில் பிரச்னையில் சிக்கலாம். இதனால், கட்டுமான பணியை பாதியில் நிறுத்தும் அளவுக்கு பிரச்னை ஏற்பட்டால் பதற்றம் அடையாமல், அதற்கான காரணங்கள் குறித்து பொறுமையாக விசாரிப்பது நல்லது.
இதில் ஒப்பந்ததாரர் யாரை பயன்படுத்தி கட்டுமான பணிகளை மேற்கொள்கிறார் என்பதில்பலரும் கவனம் செலுத்துவதில்லை. இதனால், குறைந்த ஊதியத்துக்கு வருகிறார்கள் என்ற அடிப்படையில் பெரும்பாலான இடங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு வெளி மாநில தொழிலாளர்களை அதிக அளவில் பயன்படுத்துவதில் மேலோட்டமாக பார்த்தால் எந்த தவறும் இருப்பதாக தெரியாது. அந்த நேரத்தில் கட்டுமான பணிகளில் பினிஷிங் எனப்படும் நிறைவு நிலை சரியாக இருக்கிறதா என்பதை துல்லியமாககவனிக்க வேண்டும்.
பெரும்பாலான இடங்களில் கட்டடங்கள் சரியான முறையில் துவங்கி, தரமானதாக கட்டப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொண்டாலும் நிறைவு நிலையில் காணப்படும் குறைபாடுகள் உரிமையாளர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.
வரைபடத்தில் காட்டப்பட்டதன் அடிப்படையில் கட்டடத்தின் தோற்றம் நிறைவு நிலையில் சரியாக முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். குறிப்பாக பூச்சுவேலையில் உரிமையாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாமல் இருப்பதால் பணியாளர்கள் அலட்சியமாக செயல்படுவதால்பினிஷிங் குறைபாடுகள் அதிகரிக்கின்றன.
எனவே உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு எந்த ஊர் ஆட்களை பயன்படுத்தினாலும் பினிஷிங் விஷயத்தில் உரிமையாளர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.