/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் கவனிக்க வேண்டிய முக்கிய மேட்டர்!
/
அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் கவனிக்க வேண்டிய முக்கிய மேட்டர்!
அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் கவனிக்க வேண்டிய முக்கிய மேட்டர்!
அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் கவனிக்க வேண்டிய முக்கிய மேட்டர்!
ADDED : மார் 23, 2024 12:58 AM

வீடு வாங்க நினைக்கும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் தான் தீர்வாக உள்ளன. இத்திட்டங்களில் வீடு வாங்குவோருக்கு, உள்ள நடைமுறைகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
பொதுவாக, ஒருவருக்கு சொந்தமான வீட்டை அல்லது நிலத்தை வாங்கி, தன்னுடையதாக்கி பயன்படுத்துவதுதான் மக்களின் பழக்கமாக உள்ளது.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது எது நமக்கு சொந்தம், எது பொதுவானது என்பதை புரிந்து கொள்வதில், குழப்பம் ஏற்படுகிறது.
தொடர்ந்து பல தலைமுறைகளாக, கிராமங்களில் தனி வீடுகளில் வசித்து வந்தவர்கள், நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறும்போது, சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக, அடுக்குமாடி திட்டங்களில் நிலம் மீதான உரிமை எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுக்குமாடி திட்டத்தில் நாம் வாங்கும் வீட்டுக்கு, உரிமையாளரின் பெயரில் பட்டா கிடைக்குமா என்பது தொடர்பாக குழப்பங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அடுக்குமாடி திட்டங்களில் ஒரு நிலம் எல்லை வரையறை இன்றி, அதில் வீடு வாங்கும் அனைவருக்காகவும் பங்கிடப்படுகிறது.
இது நிலத்தின், பிரிபடாத பங்கு யு.டி.எஸ்., என்று குறிப்பிடப்பட்டு, வீடு வாங்குவோர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. யு.டி.எஸ்., பாகத்தின் அளவின் அடிப்படையில், கூட்டு பட்டா வழங்க வாய்ப்பு உள்ளது என்பதை, வீடு வாங்குவோர் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுக்குமாடி திட்டங்களில், வீடு வாங்கும் போது வீட்டின் அளவு மட்டுமின்றி, அதில் உங்களுக்கான யு.டி.எஸ்.,பாக அளவு என்ன, என்பது தொடர்பாக விபரங்களை தெளிவாக விசாரிக்க வேண்டும்.
குறிப்பாக, அத்திட்டத்தில் மொத்தம் உள்ள வீடுகள் எண்ணிக்கை என்ன, யு.டி.எஸ்., பங்குகள் எண்ணிக்கை என்ன என்பதை, தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
வீடுகளின் எண்ணிக்கையை காட்டிலும், கூடுதலாக யாருக்காவது யு.டி.எஸ்., பங்கு அளிக்கப்பட்டு இருந்தால், அதில் ஏதோ குளறுபடி இருக்கிறது என்பதை புரிந்து, 'அலர்ட்' ஆவது நல்லது.
வீடுகளை விட கூடுதல் எண்ணிக்கையில், யு.டி.எஸ்., பாகம் பிரிக்கப்பட்டு இருந்தால் அதில் பிற்காலத்தில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும் என்பதை, புரிந்துக்கொள்ள வேண்டும்.
மேலும், ஒவ்வொரு வீட்டின் பரப்பளவிலும் 50 அல்லது, 40 சதவீதமாக யு.டி.எஸ்., பங்கு அளவு இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இது வீட்டின் பரப்பளவில், 10 அல்லது, 20 சதவீதமாக இருந்தால், பிற்காலத்தில் அந்த வீட்டை விற்பனை செய்யும் போது, பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்கின்றனர், கட்டுமான துறை வல்லுனர்கள்.

