/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
கீழ்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கும் போது துல்லியமாக கவனிக்க வேண்டிய வழிமுறைகள்!
/
கீழ்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கும் போது துல்லியமாக கவனிக்க வேண்டிய வழிமுறைகள்!
கீழ்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கும் போது துல்லியமாக கவனிக்க வேண்டிய வழிமுறைகள்!
கீழ்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கும் போது துல்லியமாக கவனிக்க வேண்டிய வழிமுறைகள்!
ADDED : செப் 15, 2024 08:41 AM

வீடுகளில் கிணறு அல்லது போர்வெல் வாயிலாக போதிய நீர் கிடைப்பது படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனால், புதிய வீடு கட்டும் போது மேல் நிலை தண்ணீர் தொட்டி கட்டுவது போன்று, கீழ் நிலை தண்ணீர் தொட்டி கட்டுவதும் தற்போது அவசியமானதாக உள்ளது.
இதனால், புதிய வீடு கட்டும் நிலையிலேயே கீழ் நிலை தண்ணீர் தொட்டியை எங்கு எப்படி கட்ட வேண்டும் என்பதை முறையாக திட்டமிட வேண்டும். புதிய வீட்டுக்கான அஸ்திவார துாண்கள் அமைக்கும் இடங்களை கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதலில் முடிவு செய்யும் நிலையில் தண்ணீர் தொட்டிக்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
சென்னை, மதுரை போன்ற நகரங்களில் அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைத்தால் தான் தண்ணீர் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், அதிக ஆழத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை நேரடியாக மேல் நிலை தொட்டிக்கு ஏற்றுவது எளிதல்ல.
எனவே, கீழ் நிலை தொட்டியில் தண்ணீரை சேகரித்து வைத்து, அதில் இருந்து மேல் நிலை தொட்டிக்கு சாதாரண மோட்டார்களை பயன்படுத்தி ஏற்றலாம். குறிப்பாக, நீங்கள் வீடு கட்டும் பகுதியில் உள்ளாட்சி அமைப்பு மற்றும் வடிகால் வாரிய இணைப்புகள் வாயிலாக கிடைக்கும் தண்ணீரை சேமிக்கவும் கீழ் நிலை தொட்டிகள் அவசியமாகின்றன.
இந்நிலையில், வீட்டின் முகப்பு பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்கும் போது, அங்கு கட்டடத்தின் துாண்களுக்கும், காம்பவுண்ட் சுவருக்கும் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதில், மனையின் ஓரங்களில் தண்ணீர் தொட்டிக்கான பணிகளை மேற்கொள்ளும் போது, பக்கத்து வீட்டின் துாண்கள் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கீழ்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கும் போது அதில் அடித்தளத்தில், நீர்க்கசிவு ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். அடித்தளம், பக்கவாட்டு சுவர்களில் கட்டுமான நிலையில் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும்.
இது போன்ற கீழ் நிலை தண்ணீர் தொட்டியின் மூடுதளம் அமைக்கும் நிலையில் குறிப்பிட்ட சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். தரை மட்டத்தில் இருந்து, குறைந்தபட்சம், 11 அங்குலம் உயர்ந்து இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இப்பகுதியில் தரையை கழுவி சுத்தம் செய்யும் போது, அழுக்கு நீர், தொட்டிக்குள் செல்லாத வகையில் மூடுதளத்தில் வாட்டம் ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக இங்கு, தண்ணீர் தொட்டிக்கான திறப்பு என்பது, மூடுதளத்தில் எங்கு, எப்படி அமைய வேண்டும் என்பதிலும் கவனமாக செயல்படுவது அவசியம்.
கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் எந்த விதத்திலும் கசிவுக்கான வாய்ப்பு இருக்க கூடாது என்பது மிக மிக அவசியம்.
அதே நேரத்தில் அதில் காற்றோட்டம் இருப்பதற்கு உரிய வழிமுறைகளை உரிய முறையில் ஏற்படுத்துவது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.