/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
கிரைய பத்திரத்தில் விபரங்களை சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்!
/
கிரைய பத்திரத்தில் விபரங்களை சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்!
கிரைய பத்திரத்தில் விபரங்களை சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்!
கிரைய பத்திரத்தில் விபரங்களை சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும்!
ADDED : நவ 22, 2025 07:17 AM

வீ டு, மனை போன்ற சொத்து வாங்கும் போது பத்திரங்கள் சரியாக இருக்கிறதா, அதன் முந்தைய பரிமாற்றங்களில் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்பதை துல்லியமாக பார்க்க வேண்டும். இதில் சொத்தை விற்பவர் பெயரில் பத்திரம் இருக்கிறதா என்பதை பார்ப்பது உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, ஒரு சொத்து விற்பனைக்கு வரும் நிலையில் அது தொடர்பாக உங்களை அணுகும் நபர் உண்மையான உரிமையாளர் தானா என்பதை சந்தேகப்படுவதில் தவறு இல்லை. இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் சந்தேகம் எழுந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும்.
சொத்தை விற்பவரின் அடையாள ஆவணத்தில் உள்ள விபரங்கள், பத்திரத்தில் உள்ள அடையாள விபரங்களுடன் ஒத்து போகிறதா என்று பாருங்கள். பெயர், வயது மட்டுமல்லாது, ஆதார் எண் போன்ற விபரங்களையும் துல்லியமாக பார்ப்பது அவசியம்.
சொத்து விற்பனையின் போது, பத்திரம் தொடர்பான விஷயங்களில் விழிப்புடன் செயல்படும் பலரும் பட்டா விஷயத்தில் உரிய கவனம் செலுத்துவதில்லை. ஒரு சொத்து விற்பனைக்கு வரும் நிலையில், அதற்கு முறையாக வருவாய் துறையால் பட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
அந்த பட்டா சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் அமைந்துள்ளதா என்பது உள்ளிட்ட விபரங்களை தெளிவாக ஆராய வேண்டும். சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று பத்திரங்களுக்கு முந்தைய உரிமையாளர் பெயரில் அதுவும் கூட்டு பட்டா இருப்பதை ஆதாரமாக கூறுகின்றனர்.
தற்போதைய உரிமையாளருக்கு தொடர்பில்லாத நபர் அல்லது நபர்கள் பெயரில் உள்ள கூட்டு பட்டாவை நம்பி சொத்து வாங்கும் போது ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, இரண்டு, மூன்று பரிமாற்றங்களுக்கு முந்தைய பட்டாவை முழுமையான ஆதாரமாக ஏற்றுக்கொள்வதே ஏமாற்றத்துக்கான வழியை ஏற்படுத்தும்.
ஒரு சொத்து விற்பனைக்கு வரும் நிலையில் அதன் தற்போதைய உரிமையாளர் பெயரில் பட்டா இருக்க வேண்டும். அதே நேரம் தவிர்க்க முடியாத சூழலில், பட்டாவில் பெயர் உள்ள நபரிடம் இருந்து தான் தற்போதைய உரிமையாளர் சொத்தை வாங்கியுள்ளார், பெயர் மாற்றம் மட்டுமே நிலுவை என்றால் கூட பரவாயில்லை என்று மக்கள் நினைக்கலாம்.
ஆனால், இரண்டு, மூன்று நபர்களுக்கு முந்தைய நிலையில் உள்ள உரிமையாளர்கள் பெயரில் உள்ள பட்டாவை நம்பி சொத்து வாங்கும் போது, அதன் தற்போதைய நிலவரத்தை துல்லியமாக ஆராய வேண்டும். தற்போது விற்கப்படும் சொத்து பாகம், அந்த பட்டாவில் தற்போதும் இருக்கிறது என்பதை உரிய ஆய்வுகள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்.
இது மட்டுமல்லாது, சொத்து பரிமாற்றத்துக்கு தயாரிக்கப்படும் கிரைய பத்திரத்தில் சர்வே எண், அதில் ஏற்பட்ட மாற்றங்கள், நிலத்தின் வகைப்பாடு தொடர்பான விபரங்களை குறிப்பிடுகிறோம். இத்துடன் கடைசியாக வழங்கப்பட்ட பட்டா குறித்த விபரங்களை கிரைய பத்திரத்தில் முறையாக சேர்க்க வேண்டும்.
பட்டா விபரங்களை பத்திரத்தில் ஏன் சேர்க்க வேண்டும் என்ற சந்தேகம் எழுவதில் தவறு இல்லை. உண்மையில், அந்த பத்திரத்துக்கு உரிய உண்மையான சொத்து தான் அது என்பதை உறுதி செய்ய பட்டா எண் கூடுதல் ஒரு வசதி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆவண எழுத்தர்கள் அலட்சியமாக இருந்தாலும், பத்திரத்தில் பட்டா விபரங்களை சேர்ப்பதில் உறுதியாக செயல்பட வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

