விடுதலை பத்திரம் இன்றி சொத்து பங்கீடு செய்யாதீர்!
விடுதலை பத்திரம் இன்றி சொத்து பங்கீடு செய்யாதீர்!
ADDED : செப் 26, 2026 07:08 AM

குடும்ப சொத்தை அதன் வாரிசுகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள முழு உரிமை உள்ளது. ஆனால், குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் சொத்துகளை பங்கிட்டு கொள்வதற்கான வழி முறைகளில் தெளிவான அணுகுமுறை இருக்க வேண்டும்.
பொதுவாக, ஒரு குடும்பத்தில் தந்தை சுயமாக சம்பாதித்த சொத்து இருக்கும். ஆனால், அவர் உயில் எழுதாமல் இறந்த நிலையில் அதை எப்படி பங்கிடுவது என்பதில் வாரிசுகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படுவதில் தான் பிரச்னைகள் வருகின்றன.
இதே போன்று, பரம்பரை சொத்தை குடும்ப வாரிசுகளுக்குள் பங்கிடுவதிலும் சட்ட ரீதியாக, தனி மனித விருப்பங்கள் காரணமாகவும் பிரச்னை கள் ஏற்படுகின்றன. குடும்பத்தில் உள்ள சொத்தில் அனைத்து வாரிசுகளும் தங்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை தான்.
இதில், சொத்து எப்படி உள்ளது என்ற அடிப் படையில் தான் பங்கீட்டு பணிகளை மேற்கொள்ள முடியும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது என்றால், ஐந்து வாரிசுகளும் ஆளுக்கு ஒரு ஏக்கர் என்ற அடிப்படையில் பங்கிட்டு கொள்ளலாம்.
ஆனால், சென்னை போன்ற நகரத்தில், 1,200 சதுர அடி நிலத்தை ஒருவர் சொத்தாக வைத்திருந்தால், அதை நான்கு வாரிசு களுக்கு பங்கிடுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். இதை நான்கு பாகமாக பிரித்தால் ஆளுக்கு, 300 சதுரடி நிலம் தான் கிடைக்கும்.
அதை பெறுபவர் வீடு கட்ட முறையாக பயன்படுத்துவதில் பிரச்னை ஏற்படும். இதனால், 1,200 சதுர அடி நிலத்தின் மதிப்பை வரையறை செய்து அத்தொகையை நான்கு பாகங்களாக பிரித்து, வாரிசுகளில் ஒருவருக்கு, மற்றவர்கள் பணம் வாங்கிக்கொண்டு விட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, சொத்து பங்கீட்டால், நான்கில் ஒருவருக்கு மட்டும் சொத்தை மற்றவர்கள் விட்டு கொடுக்கும் நிலையில் அதை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். இதற்கு விடுதலை ஆவணம் எழுதி அதை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
சொத்து பங்கீடு செய்யும் போது அதில் அனைத்து வாரிசுகளும் உரிய முறையில் விடுதலை பத்திரம் கொடுத்தால் தான், தெளிவான நிலை ஏற்படும். இது விஷயத்தில், வாய் வார்த்தை அடிப்படையில் பேசி முடிவு எடுத்துவிட்டோம் என்று அமைதியாக இருக்க கூடாது.
இப்படி பேச்சு அடிப்படையில் எடுக்கும் முடிவுகள் சட்ட ரீதியாக செல்லாது என்பதை புரிந்து கொண்டு மக்கள் செயல்பட வேண்டும் என்கின்றனர், ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
சொத்து பங்கீடு செய்யும் போது அதில் அனைத்து வாரிசுகளும் உரிய முறையில் விடுதலை பத்திரம் கொடுத்தால் தான், தெளிவான நிலை ஏற்படும்.
