அறிமுக நிலையில் வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
அறிமுக நிலையில் வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ADDED : செப் 19, 2026 07:10 AM

சென்னை போன்ற நகரங்களில் பட்ஜெட்டுக்குள் எப்படியாவது வீடு வாங்க வேண்டும் என மக்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், பிரபல நிறுவனங்களின் திட்டங்களில் வீடுகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில், விலை உயர்வு தொடரும் நிலையில், எப்படி வீடு வாங்குவது என்பதில் மக்களின் முயற்சிகள் பாதியில் முடங்கும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழலில், மக்களை ஈர்க்கும் வகையில் கட்டுமான நிறுவனங்கள் சில சலுகைகளை வழங்குகின்றன.
குறிப்பாக, புதிய இடங்களில் குடியிருப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தும் போது, முன்பதிவு செய்வோருக்கு விலையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் வீடுகளின் விலையாக நிர்ணயிக்கும் தொகையில், 20 சதவீதம் வரை அறிமுக நிலையில் சலுகைகள் வழங்குகின்றன.
புதிய திட்டத்தில் அறிமுக நிலையில், குறைந்தபட்சம், 50 பேர் முன்பதிவு செய்தால் அது அத்திட்டத்தில் மீதி வீடுகளை விற்பனை செய்வதற்கு பேருதவியாக அமையும். இதனால், தான் கட்டுமான நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் போது விலையில் சலுகைகள் வழங்குகின்றன.
இந்நிலையில், சந்தை நிலவரப்படியான விலையில், 20 சதவீதம் குறைவாக கிடைப்பதால், அறிமுக நிலையில் வீடு வாங்க பலரும் முன்பதிவு செய்கின்றனர். ஆனால், இத்தகைய அறிமுக நிலையில் வீடு வாங்க முன்பதிவு செய்வோர் குறிப்பிட்ட அடிப்படை விஷயங்களை கவனிக்க வேண்டும்.
அந்த குறிப்பிட்ட குடியிருப்பு திட்டம், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்து, விற்பனைக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று பாருங்கள். ரியல் எஸ்டேட் ஆணைய இணையதளத்தில் அத்திட்டம் குறித்த விபரங்களை சரி பார்ப்பது அவசியம்.
புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் கட்டுமான நிறுவனம் இதற்கு முன் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வது அவசியம். முந்தைய திட்டங்களை அந்நிறுவனம் குறித்த காலத்தில் முடித்து வீடுகளை ஒப்படைத்துள்ளதா என்று பாருங்கள்.
தற்போது அறிமுகப்படுத்தப்படும் திட்டம் செயல்படுத்தப்படும் இடம், மக்கள் குடியிருப்பதற்கு ஏற்ற பகுதியா என்பதையும், அங்கு அக்கம் பக்கத்து சூழல் பாதுகாப்பானதா என்பதையும் விசாரிக்க வேண்டும். வீடு ஒப்படைப்பதற்கான கால அவகாசம் என்ன என்பது தொடர்பான விபரங்களை கேட்டு அறிய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
