/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
மழையை ரசித்தால் போதாது; நீரை சேமிக்கவும் வேண்டும்!
/
மழையை ரசித்தால் போதாது; நீரை சேமிக்கவும் வேண்டும்!
மழையை ரசித்தால் போதாது; நீரை சேமிக்கவும் வேண்டும்!
மழையை ரசித்தால் போதாது; நீரை சேமிக்கவும் வேண்டும்!
UPDATED : ஜூலை 06, 2024 07:11 AM
ADDED : ஜூலை 06, 2024 12:13 AM

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, வெறும் அனுமதிக்காக மட்டுமல்லாமல், கட்டடங்களில் உருவாக்கினால் மட்டுமே, நிலத்தடி நீர்மட்டத்தை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இதுகுறித்து, கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க (காட்சியா) செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
மொட்டை மாடியில் இருந்து மழை நீரை தரைக்கு கொண்டு செல்ல, மழைநீர் வடிகால் குழாய்களை அமைக்க வேண்டும். அதன் பின், தரையில் மழைநீர் கசிவுத் தொட்டிகள் அமைத்து நீரை துாய்மையாக்கி, மண்ணில் பரவலாக கசியவிட வேண்டும்.
குறைந்தபட்ச அளவாக, கட்டடங்களின் அருகில், தரை பகுதிகளில், ஒரு மீட்டர் அகலம், 1.5 மீட்டர் ஆழத்துக்கு குழி எடுக்க வேண்டும். அதில், செங்கல் கட்டடம் அல்லது கான்கிரீட் ரிங் கொண்டு தொட்டி அமைக்க வேண்டும். பின், கருங்கல் ஜல்லி, உடைந்த செங்கற்கள், கூழாங்கற்கள் முறையே நிரப்ப வேண்டும். மழை நீரை அதில் விட்டு பூமிக்குள் நேரடியாக ஊறச் செய்யலாம். இதனால் நிலத்தடி நீர் மட்டம் மேம்படும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில்
அடுக்குமாடி குடியிருப்புகளாயின், மொட்டை மாடியில் இருந்து குழாய்கள் வழியாக, மழை நீரை பெரிய சேமிப்பு தொட்டிகளில் சேகரித்து, அந்நீரை சுத்தம் செய்து மூன்று முதல் ஆறு மாதம் வரை குடிநீருக்கும், மற்ற உபயோகத்துக்கும் பயன்படுத்தலாம். திறந்த வெளியில் விழும் மழை நீரை, தடுப்பு அமைப்புகளை உருவாக்கி, அந்நீரை நிலத்தில் கசிய விடலாம்.
பொது இடங்களிலும், அரசு சார்பில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நகர்ப்புற பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், ரேஸ் கோர்ஸ் போன்ற பகுதிகளில் ஜெர்மன் டெக்னாலஜியில் 'பாலி பிரோப்பிளின்' அமைப்புகளை கொண்டு, மழைநீர் வடிகால் அமைத்து மழைநீர் வீணாகாமல் நிலத்தடியில் சேமிக்க வழிவகை செய்துள்ளது.
மேலும் மற்ற பகுதியில், பல கி.மீ., துாரத்துக்கு, பரீகாஸ்ட் கான்கிரீட் மற்றும் கான்கிரீட் வடிகால் கால்வாய்களை அமைத்து மழை நீரை சேகரித்து அருகிலுள்ள குளங்களுக்கு எடுத்துச் சென்று சேமிக்கும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தி வருவதும் நாம் அறிந்ததே.
இது ஒரு புறம் இருப்பினும், ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேமிப்பு என்பது வெறும் கண் துடைப்பாக அல்லாமல், முறையாக தொட்டிகளை அமைத்து, நீரை சேமித்தால், நமக்கும், எதிர்காலத்துக்கும் நல்லது. இவ்வாறு, அவர் கூறினார்.