கூட்டு பட்டா சொத்துக்களை வாங்குவோர் சந்திக்கும் பிரச்னைகள்!
கூட்டு பட்டா சொத்துக்களை வாங்குவோர் சந்திக்கும் பிரச்னைகள்!
UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 08:54 PM

பு திதாக வீடு, மனை, காலி நிலம் போன்ற சொத்துக்களை வாங்கும் போது அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இதில், அந்த சொத்துக்கான பட்டா தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் வாங்க நினைக்கும் சொத்துக்கு பட்டா உள்ளதா, அது யார் பெயரில் உள்ளது என்பது போன்ற விஷயங்களை தெளிவாக விசாரிக்க வேண்டும். இது போன்ற சொத்துக் களுக்கு உரிமையாளர் வைத்திருக்கும் பட்டாவின் உண்மை தன்மையை தெளிவாக ஆராய வேண்டும்.
இதில் உரிமையாளர் பெயரில் மாற்றப்படாத பட்டா என்றால், அது யார் பெயரில் இருக்கிறது? அதை சொத்து வாங்கிய பின் உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கான வழிகள் என்ன என்று பாருங்கள். சில இடங்களில் சொத்து விற்பவருக்கு முந்தைய நபர் பெயரில் பட்டா இருக்கும்.
ஆனால், அந்த பட்டா தொடர்பாக, வருவாய் துறையில் ஏதாவது புகார், மேல்முறையீடு இருக்கலாம். இத்தகைய சூழலில், அந்த சொத்தை வாங்குவோர் நிலுவையில் உள்ள பிரச்னையில் தானாக சென்று சிக்கிக்கொள்வதாக அமைந்துவிடும்.
நீங்கள் சொத்தை வாங்க வேண்டும் என்றால், அது தொடர்பான பட்டா குறித்து எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். இதில் கூட்டு பட்டாவில் இருக்கும் சொத்தை நீங்கள் உங்கள் பெயருக்கு வாங்கும் போது, பட்டா பெயர் மாற்றத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
பெரும்பாலான சமயங்களில், கூட்டு பட்டா சொத்தை வாங்கும் போது, அதில் பட்டா மாறுதலுக்கு மக்கள் விண்ணப்பிக்கின்றனர். இதில், விண்ணப்பத்தை ஏற்று, அந்த நபரின் பெயரை கூட்டு பட்டாவில் சேர்த்து விடுவதை வருவாய் துறையினர் வழக்கமாக வைத்துள்ளனர்.
இது போன்ற சூழலில், சொத்து வாங்குவோர் விழிப்புடன் செயல் பட்டு, தங்கள் பெயருக்கு தனிபட்டா வேண்டும் என்பதை தெளிவாக வலியுறுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் நிலையில் அலட்சியமாக இருந்தால், மீண்டும் கூட்டு பட்டாவை வைத்துக் கொண்டு அலைய வேண்டிய நிலை ஏற்படும்.
உங்கள் பெயரில் பதிவான சொத்துக்கு கூட்டு பட்டா பெறுவதைவிட, தனி பட்டா பெறுவது தான் எதிர்காலத்தில் பயன்பாட்டை எளிதாக்கும். அந்த கூட்டு பட்டாவில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்னைகள் உங்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.
கூட்டு பட்டா சொத்தை வாங்கும் போது, அதில் பட்டா மாறுதலுக்கு மக்கள் விண்ணப்பிக்கின்றனர். இதில், விண்ணப்பத்தை ஏற்று, அந்த நபரின் பெயரை கூட்டு பட்டாவில் சேர்த்துவிடுவதை வருவாய் துறையினர் வழக்கமாக வைத்துள்ளனர்.
