UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 08:54 PM

க ட்டுமான துறையில் அஸ்திவாரம் தொடர்பாக பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உங்கள் வீட்டுக்கு எது ஏற்றது என்பதை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப் படுகிறது.
இதில் நிலம் குறித்த முழு விபரங்களையும் கட்டட அமைப்பியல் பொறியாளரிடம் தெரிவித்தால், அவர் அங்கு என்ன வகை அஸ்திவாரம் அமைக்கலாம் என்று பரிந்துரைப்பார். அதிலும் அஸ்திவாரம் எவ்வளவு ஆழத்தில் எப்படி அமைய வேண்டும் என்ற வழிகாட்டுதல் கொடுப்பார்.
இதில் கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் பெறுவதற்கு முன், நிலத்தில் மண் பரிசோதனை செய்து அதன் அறிக்கையுடன் செல்ல வேண்டும். அப்போது தான் கட்டட அமைப்பியல் பொறியாளரிடம் இருந்து சரியான வழிகாட்டுதல்களை பெற முடியும்.
பொதுவாக மண் பரிசோதனை அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிலத்தில் உறுதியான மண் அடுக்கு அல்லது பாறை எங்குள்ளது என்று பார்ப்பர். சாதாரண கட்டடங்கள் என்றால் பாறை அடுக்கு வரை செல்லாமல், உறுதியான மண் அடுக்கில் அஸ்திவாரம் அமைக்கப்படும்.
இதில் நிலத்தின் பரப்பளவு என்ன; அதில் கட்டப்படும் கட்டடத்தின் பரப்பளவு என்ன என்ற அடிப்படையில் அஸ்திவார துாண்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக, நிலத்தின் மொத்த பரப்பளவில், 50 சதவீதத்துக்குள் தான் அஸ்திவார துாண்கள் இருக்க வேண்டும்.
ஆனால், சில இடங்களில் மண் அடுக்கு உறுதி குறைபாடு காரணமாக கூடுதல் எண்ணிக்கையில் துாண்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும். இவ்வாறு கூடுதல் எண்ணிக்கையில் துாண்கள் அமைக்கப்படும் நிலையில், அது நிலத்தின் 60 சதவீத பரப்பளவை கவர் செய்யும் நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள்.
அப்படி, 60 சதவீத பரப்பளவுக்கு துாண்கள் அமைக்கப்படும் நிலையில், அங்கு அஸ்திவாரத்தின் அடி மட்டத்தில் இருந்து சற்று உயரத்தில், கான்கிரீட் தளம் அமைப்பது நல்லது. இவ்வாறு அஸ்திவார துாண்களை இணைத்து அமைக்கப்படும் கான்கிரீட் தளம் ‘ராப்ட் பவுண்டேஷன்’ என்று கூறப்படுகிறது.
நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள இடங்கள், மேல்மட்ட மண் அடுக்குகள் உறுதியாக இல்லாத சூழலில், அந்த மண்ணை மொத்தமாக அகற்றிவிட்டு ராப்ட் பவுண்டேஷன் அமைப்பர். இவ்வாறு செய்வதால், அஸ்திவார துாண்கள் நிலையில் சுமை பரவலில் பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
இது மட்டுமல்லாது, துாண்களின் அடிமட்ட நிலையில் மண் அடுக்கு பாதிப்பு காரணமாக எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். கூடுதல் செலவு என்று பார்க்காமல், கட்டடத்தின் அடித்தளமாக இதை பயன்படுத்த திட்டமிடலாம் என்கின்றனர் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள்.
நிலத்தில், 60 சதவீத பரப்பளவுக்கு துாண்கள் அமைக்கப்படும் நிலையில், அங்கு அஸ்திவாரத்தின் அடி மட்டத்தில் இருந்து சற்று உயரத்தில், கான்கிரீட் தளம் அமைப்பது நல்லது. இவ்வாறு அஸ்திவார துாண்களை இணைத்து அமைக்கப்படும் கான்கிரீட் தளம் ‘ராப்ட் பவுண்டேஷன்’ என்று கூறப்படுகிறது.
