சுவர்களில் பதிகற்கள் அமைக்கும் முன் ‘வாட்டர் புரூபிங்’ அவசியம்!
சுவர்களில் பதிகற்கள் அமைக்கும் முன் ‘வாட்டர் புரூபிங்’ அவசியம்!
UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 08:44 PM

பு திதாக வீடு கட்டும் போது அதில் அடிப்படை பாகங்களின் உறுதி தன்மையை கவனித்தால் மட்டும் போதாது. கட்டடத்தில் நீர்க்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்ன என்பதையும் கவனத்தில் வைத்து உரிமையாளர்கள் செயல்பட வேண்டும்.
இதில் கட்டுமான பணியில் மேல் தளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், அதிலிருந்து கசிவு ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகளில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பயன்பாட்டு நிலையில் ஏற்படும் கசிவுகளை எப்படி தடுப்பது என்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை.
இதனால், குளியலறை, கழிப்பறை, சமையலறை போன்ற பகுதிகளில் எளிதாக நீர்க்கசிவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு கட்டடத்தை கட்டும் போது அதில் தண்ணீர் பயன்பாடு உள்ள இடங்கள் எவை, அங்கு சுவரில், தரையில் தண்ணீர் பட்டால் அதனால் கட்டடத்துக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை பார்க்க வேண்டும்.
இது போன்ற இடங்களில் சுவரில் ஈரம் ஏற்படாமல் தடுக்க, டைல்ஸ் எனப்படும் பதிகற்கள் அமைப்பது தற்போது வழக்கமாக உள்ளது. ஆனால், பதிகற்கள் அமைத்துவிட்டால் நீர்க்கசிவு பிரச்னை முழுமையாக அடங்கி விடும் என்று நினைப்பது சரியான வழி அல்ல.
பொதுவாக கட்டடங்களில் தண்ணீர் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் பதிகற்களை ஒட்ட வேண்டும் என்றால், அதற்கான பணிகளை முறையாக திட்டமிட்டு செய்ய வேண்டும். குறிப்பாக, பதிகற்கள் ஒட்டுவதற்கு முன் சுவர், தரைப் பகுதிகளில் வாட்டர் புரூப்பிங் எனப்படும் நீர்க்கசிவு தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கட்டுமான பணி முடிந்த நிலையில் சுவர்கள், தரைகளில் பதிகற்கள் ஒட்டுவதில் என்ன தவறு என்று தான் பலரும் நினைக்கின்றனர். பதிகற்கள் ஒட்டியபின், சுவருக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்த விபரங்கள் வெளிப்படையாக தெரியாது.
இதில் பதிகற்கள் இணைப்பு பகுதி வழியாக ஈரம் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதே போன்று, ஒரு பக்கம் பதிகற்கள் ஒட்டினாலும், சுவரின் மறு பக்கத்தில் ஈரம் ஏற்பட வழி உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, கட்டு வேலை முடிந்த நிலையில், நீர்க்கசிவு தடுப்புக்கான ரசாயனங்களை பொறியாளர் வழிகாட்டுதலுடன் சுவரில் பூச வேண்டும். அதன் மேல் கலவை வைத்து பதிகற்கள் ஒட்டுவது பாதுகாப்பான வழியாக இருக்கும் என்கின்றனர்.
கட்டுமான பணி முடிந்த நிலையில் சுவர்கள், தரைகளில் பதிகற்கள் ஒட்டுவதில் என்ன தவறு என்று தான் பலரும் நினைக்கின்றனர், பதிகற்கள் ஒட்டியபின் சுவருக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்த விபரங்கள் வெளிப்படையாக தெரியாது.
