தலைவாசலுக்கு தேக்கு மரத்தை தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
தலைவாசலுக்கு தேக்கு மரத்தை தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ADDED : செப் 12, 2026 01:29 AM

வீடு கட்டும் போது, அதில் தலைவாசல் நிலை அமைப்பது, கதவு, ஜன்னல் ஆகியவற்றுக்கு மரம் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆனால், வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் பலருக்கும் மரம் தொடர்பான விஷயங்களில் போதிய பரிச்சயம் இருக்காது.
இதற்காக, அவர்கள் ஒப்பந்ததாரரே நிலை வாசல் மரங்களை தேர்வு செய்யட்டும் என்று விட்டுவிடுகின்றனர். ஆனால், இதில் பெரும்பாலான சமயங்களில் சிவில் பொறியியல் துறையில் அனுபவம் இருக்கும் பொறியாளர் மரம் தேர்வு விஷயத்தில் வல்லுனராக இருப்பார் என்று எதிர்பார்ப்பது நல்லதல்ல.
பெரும்பாலான சமயங்களில் தலைவாசலுக்கான நிலையும், கதவும் ஒரே வகை மரத்தால் ஆனதாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், தலைவாசல் நிலையும், கதவும் வெவ்வேறு வகை மரமாக இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதில் தலைவாசல் நிலை என்ன மரமாக இருந்தால் என்ன, கதவு மட்டும் அதிக தரமானதாக இருந்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். உண்மையில், மரம் வாங்கும் போது சில அடிப்படை விஷயங்களை மக்கள் புரிந்து தெளிவாக செயல்பட வேண்டும்.
வீட்டுக்கு தலைவாசல் அமைக்கும் போது அதற்கு தேக்கு மரத்தை பயன்படுத்த வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். தேக்கு மரத்தை பொறுத்தவரை, கேரளா தேக்கு, பர்மா தேக்கு, நைஜீரியா தேக்கு ஆகியவை பிரபலமாக உள்ளன.
கேரளா தேக்கு என்றால், அதில் நிலம்பூர் தேக்கு, சாதாரண தேக்கு என வெவ்வேறு வகை தேக்கு மரங்கள் பல்வேறு தர நிலைகளில் கிடைக்கின்றன. இதில் முதல் தரமான தேக்கு மரங்கள் அதிக விலை என்பதால், குறைந்த விலையில் கிடைக்கும் இரண்டாம் தர தேக்கு மரங்களை மக்கள் தேர்வு செய்கின்றனர்.
நீங்கள் தேர்வு செய்யும் தேக்கு மரத்தில், மேற்புறத்தில் கிரைன்ஸ் எனப்படும் கோடுகள் அல்லது சுழல்கள் சரியாக இருக்க வேண்டும். இந்த கிரைன்ஸ் இல்லாமல், வெள்ளையாக இருந்தால் அந்த மரத்தில் தரம் சார்ந்த குறைபாடு இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.
இதற்கு அடுத்தபடியாக, தேக்கு மரத்தின் மேற்புறத்தில், துளைகள், வெடிப்புகள் எதுவும் இருக்க கூடாது என்பதில் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டுக்கான தலைவாசல் நிலை என்ன மரத்தில் செய்யப்படுகிறது என்பதை தாண்டி தரம் சார்ந்த தகவல்களை ஆராய வேண்டும்.
உங்கள் வீட்டின் பிரதான பாகமான தலைவாசல் நிலை தரமான மரத்தால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.
இதில் தேக்கு மரம் வாங்கினால் போதும் என்பதை கடந்து அதன் தரத்தை துல்லியமாக பார்க்க வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
உங்கள் வீட்டின் பிரதான பாகமான தலைவாசல் நிலை தரமான மரத்தால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.
