/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
நில அளவை வரைபடம் பெறுவதில் ஏற்படும் பிரச்னைகள் தீர்வது எப்போது?
/
நில அளவை வரைபடம் பெறுவதில் ஏற்படும் பிரச்னைகள் தீர்வது எப்போது?
நில அளவை வரைபடம் பெறுவதில் ஏற்படும் பிரச்னைகள் தீர்வது எப்போது?
நில அளவை வரைபடம் பெறுவதில் ஏற்படும் பிரச்னைகள் தீர்வது எப்போது?
ADDED : ஏப் 13, 2024 10:25 AM

வீடு, மனை வாங்கும் போது அது தொடர்பான அனைத்து ஆவணங்களின் அசல் அல்லது நகல் பிரதிகளை கேட்டு வாங்குவது அவசியம். நீங்கள் வாங்கும் வீடு, மனை தற்போது யார் பெயரில் உள்ளது, அதில் முந்தைய பரிமாற்றங்கள் தொடர்பாக வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
பொதுவாக, பெரும்பாலான மக்கள் வீடு, மனை போன்ற சொத்துக்கள் தொடர்பான, 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழை ஆய்வு செய்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். இதில், முந்தைய பரிமாற்றங்களில் வில்லங்கம் எதுவும் இல்லை என்பதுடன் பலரும் அமைதியாகிவிடுகின்றனர்.
சொத்து வாங்கும் நிலையில் பத்திரப்பதிவு சார்ந்த விஷயங்களை மட்டும் முழுமையாக ஆய்வு செய்தால் போதும் என்று மக்கள் நினைப்பது தவறு. இதற்கு அப்பால் வருவாய் துறை ஆவணங்களான பட்டா, நில அளவை வரைபடம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்.
குறிப்பாக, நீங்கள் வாங்கும் வீடு, மனை அமைந்துள்ள நிலம் தொடர்பான மனைப்பிரிவு வரைபடத்தை விற்பவர் வைத்து இருப்பார். அதன் உண்மை தன்மை தொடர்பான விஷயங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியது சொத்து வாங்குவோரின் பொறுப்பாகும்.
தற்போதைய சூழலில் நீங்கள் வாங்கும் சொத்து குறித்த சர்வே எண், கிராமத்தின் பெயர், தாலுகா, மாவட்டம் உள்ளிட்ட விபரங்கள் இருந்தால் போதும். வருவாய் துறையின் இ-சேவைகள் இணையதளம் வாயிலாக, அந்த சொத்துக்கான பட்டா தற்போது யார் பெயரில் உள்ளது என்பதை எளிதாக அறியலாம்.
பட்டா விஷயங்கள் சரியா இருந்தால் போதும் என்று நீங்கள் அமைதியாக இருந்துவிட கூடாது. அந்த பட்டா வழங்கப்பட்ட போது தயாரிக்கப்பட்ட, எப்.எம்.பி., ஸ்கெட்ச் எனப்படும் நில அளவை வரைபடத்தை கேட்டு வாங்கி முழுமையாக ஆய்வு செய்வது அவசியம்.
ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் பட்டா வழங்கப்படும் நிலையில் அதற்கான நில அளவை வரைபடம் தயாரிக்கப்படும். அத்துடன் அந்த சர்வே எண்ணில் ஒவ்வொரு உட்பிரிவும் உருவாக்கப்படும் நிலையிலும் நில அளவை வரைபடம் தயாரிக்கப்படும் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான இடங்களில் நிலத்தின் பிரதான சர்வே எண்ணு க்கு வழங்கப்பட்ட பட்டா, நில அளவை வரைபடம் இருக்கும். ஆனால், அதில் இருந்து உருவான உட்பிரிவுகளுக்கு தயாரிக்கப்பட்ட பட்டா, நில அளவை வரைபட விபரங்கள் வெளியில் காட்டப்படாமல் இருக்கும்.
சொத்து தொடர்பான இது போன்ற விஷயங்களை துல்லியமாக கவனித்து செயல்பட வேண்டியது அவசியம். எவ்வித தயக்கமும் இன்றி இந்த விபரங்களை கேட்டு வாங்க வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

