/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீடு, மனை வாங்கும் போது கேட்டு பெற வேண்டிய சான்றிதழ்கள்!
/
வீடு, மனை வாங்கும் போது கேட்டு பெற வேண்டிய சான்றிதழ்கள்!
வீடு, மனை வாங்கும் போது கேட்டு பெற வேண்டிய சான்றிதழ்கள்!
வீடு, மனை வாங்கும் போது கேட்டு பெற வேண்டிய சான்றிதழ்கள்!
ADDED : ஆக 31, 2024 11:16 AM

சொந்தமாக வீடு அல்லது மனை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதில் சொத்து வாங்கும்போது அது தொடர்பான குறிப்பிட்ட சில பத்திரங்கள் மட்டும் கிடைத்தால் போதும் என்று மக்கள் அலட்சியமாக நினைக்கின்றனர்.
பொதுவாக, ஒரு சொத்து விற்பனைக்கு வருகிறது என்றால் அதன் உரிமை தொடர்பான ஆவணங்களை முழுமையாக சரி பார்ப்பது வழக்கம். இந்த ஆவணங்கள் அடிப்படையில் புதிய கிரைய பத்திரம் எழுதப்பட்டு, அதை பதிவு செய்வதில் தான் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.
இவ்வாறு, கிரைய பத்திரத்தை பதிவு செய்துவிட்டால் மட்டும் போதாது. அந்த சொத்து தொடர்பான தாய்பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் அதன் உரிமையாளரிடம் இருந்து கேட்டு பெற்றால் மட்டுமே விற்பனை நடவடிக்கை முழுமை பெறும்.
குறிப்பாக, ஒரு சொத்து தொடர்பான பத்திரங்களுக்கு அப்பால் பல்வேறு வகையான சான்றிதழ்களை நாம் கேட்டு பெற வேண்டியது அவசியமாகிறது. பத்திரங்களுக்கு அப்பால் சான்றிதழ்கள் வகையில் என்ன விஷயத்தை கவனிக்க வேண்டும்என்பதே பலருக்கும் புதிராக உள்ளது.
உதாரணமாக, ஒரு சொத்தின் அதிகாரப்பூர்வ உரிமையாளர் இறந்த நிலையில் அவரது வாரிசுகள் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சொத்தை விற்பனை செய்யலாம். இவ்வாறு அவர்கள் விற்பனை செய்யும் நிலையில், இறந்த நபரின் சட்டப்பூர்வ வாரிசுகள் இவர்கள் தான் என்பதற்கான வாரிசு சான்றிதழ்.
சொத்தின் அதிகாரப்பூர்வ உரிமையாளர் இறந்தது தொடர்பான இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட விஷயங்களை கேட்டு வாங்க வேண்டும். குறிப்பாக, ஒரு சொத்தின் அசல் பத்திரங்கள் ஏதாவது ஒன்று காணாமல் போயிருந்தால், அதன் சான்றிடப்பட்ட பிரதியின் அடிப்படையில், பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டால், அசல் பத்திரம் தொலைந்தது தொடர்பாக காவல் நிலையத்தில்புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பாக சான்றிதழ் பெறப்பட்டு இருக்க வேண்டும்.
இதே போன்று, ஒரு சொத்தின் விற்பனையின் போது, அது தொடர்பான வங்கியில் கடன் வாங்கப்பட்டு இருந்தால், கடன் முடிக்கப்பட்டதற்கான சான்றிதழை கேட்டு பெற வேண்டும். வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியவர் அந்த சொத்தை விற்பனை செய்யும் போது, கடன் கொடுத்த வங்கியின் சான்றிதழ் அவசியம்.
அரசின் சமூகநல திட்டங்கள் அடிப்படையில் பெறப்பட்ட வீடு, மனையை ஒருவர் விற்கும் நிலையில் அதை விற்பதற்கான அனுமதி தொடர்பான சம்பந்தப்பட்ட துறையின் சான்றிதழ் அவசியம். இது போன்ற பல்வேறு சான்றிதழ்களை கேட்டு வாங்கினால் தான் சொத்து வாங்கும் நபர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.