/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பட்டா மாறுதல் விஷயத்தில் மக்கள் விழிப்புடன் செயல்படுவது எப்படி?
/
பட்டா மாறுதல் விஷயத்தில் மக்கள் விழிப்புடன் செயல்படுவது எப்படி?
பட்டா மாறுதல் விஷயத்தில் மக்கள் விழிப்புடன் செயல்படுவது எப்படி?
பட்டா மாறுதல் விஷயத்தில் மக்கள் விழிப்புடன் செயல்படுவது எப்படி?
ADDED : அக் 04, 2025 06:57 AM

த மிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகளை எளிதாக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில ஆண்டுகள் முன்பு வரை சொத்து வாங்குவோர், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் வழிமுறை இருந்தது.
இதற்கு உரிய கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், பட்டா பெயர் மாற்றப் பணிகள் முறையாக நடக்கவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் மேனுவல் முறையில் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சொத்து வாங்குவோர் அதற்கான பட்டா பெயர் மாற்றம் தேவைப்படும் நிலையில், மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பங்களை அளிக்கலாம். இங்கு, 60 ரூபாய் கட்டணம் செலுத்தினால் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம்.
இந்த விண்ணப்பங்கள் பெயர் மாற்றம் மட்டும் என்றால் கிராம நிர்வாக அலுவலருக்கும், நிலத்தின் சர்வே எண் உட்பிரிவு தேவை எனில் நில அளவையாளருக்கும் ஆன்லைன் வாயிலாக அனுப்பப்படும்.
அவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ள சொத்து தொடர்பான தாய் பத்திரம், தற்போது பதிவான பத்திரம், பழைய பட்டா, நில வரைபடம் போன்ற விபரங்கள் ஆய்வு செய்யப்படும். இதற்கு மேல் கூடுதல் விபரங்கள் தேவைப்பட்டால் விண்ணப்பதாரரை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்பு கொண்டு கேட்பர்.
இது போன்று விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது சரியான மொபைல் போன் எண், இ -- மெயில் முகவரி போன்ற விபரங்களை அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள், 30 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும்.
இதன்படி, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், 30 நாட்களில் முடிவு எடுக்காத நிலையில், அவருக்கு மேல் அதிகாரி யார் என்று பார்த்து முறையிட வேண்டும். பெரும்பாலும் பட்டா பெயர் மாற்ற விவகாரங்களில் கிராம நிர்வாக அலுவலர் நிலையில் இருந்து முடிவுகள் வராத நிலையில் தாசில்தாரிடம் முறையிடலாம்.
அப்போதும் தீர்வு கிடைக்காத நிலையில் மக்கள் இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவதற்கும் வழிவகை உள்ளது. பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்படுகிறது, உரிய காரணம் இன்றி நிராகரிக்கப்படுகிறது என்றால், அது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யவும் மக்களுக்கு உரிமை உள்ளது.
எனவே, பட்டா மாறுதல் விண்ணப்பங்களை முறையாக தாக்கல் செய்தும் அதிகாரிகள் ஏற்காத நிலையில் நீதிமன்றங்களை அணுகலாம் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள்.