/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீடு வாங்கும் போது கட்டட வரைபடம் சரிபார்ப்பது எப்படி?
/
வீடு வாங்கும் போது கட்டட வரைபடம் சரிபார்ப்பது எப்படி?
வீடு வாங்கும் போது கட்டட வரைபடம் சரிபார்ப்பது எப்படி?
வீடு வாங்கும் போது கட்டட வரைபடம் சரிபார்ப்பது எப்படி?
ADDED : மார் 30, 2024 12:59 AM

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கான தேடலில் ஈடுபட்டிருப்போர் குறிப்பிட்ட சில விஷயங்களில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எந்த பகுதியில் எத்தகைய திட்டம் என்பதை முடிவு செய்யும் போது, அந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்று பாருங்கள்.
ஒரு குறிப்பிட்ட குடியிருப்பு திட்டத்தை, செயல்படுத்தும் நிறுவனம் மீதான நம்பகத்தன்மை சரியாக இருந்தாலும், அத்துடன் அமைதியாக இருப்பது நல்லதல்ல.
சில நிறுவனங்கள் அனைத்து திட்டங்களையும் முறையாக செய்யும் என்றாலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தில், பணிகள் முறையாக நடந்துள்ளதா என்று பாருங்கள்.
பொதுவாக, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் உரிய அனுமதி பெற்ற பின்தான், பணிகளை துவக்க வேண்டும்.
ஆனால், விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறோம் என்ற அடிப்படையில், சில நிறுவனங்கள் திட்ட அனுமதிக்கு விண்ணப்பத்தை தாக்கல் செய்த நிலையிலேயே, பணிகளை துவக்கி விடுகின்றன.
நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்துக்கு, உரிய அரசு துறைகளிடம் இருந்து முறையாக கட்டுமான திட்டஅனுமதி பெறப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
இதற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டதற்கான வரைபடத்தை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும் என்பது அடிப்படை நடைமுறை.
இதில் ஒரு திட்டத்தை தேர்ந்தெடுத்து, அதில் எந்த வீடு என்பதை முடிவு செய்து, குறைந்தபட்ச அளவில் குறிப்பிட்ட ஒரு தொகையை கொடுத்தால், வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள் கிடைக்கும். அந்த ஆவணங்களில் ஏதாவது குளறுபடி இருக்கிறதா என்பதை, தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
இது போன்ற ஆவணங்களை, கட்டுமான துறை சார்ந்த முறையான அனுபவம் உள்ள வல்லுனர்கள் உதவியுடன், ஆவணங்களின் உண்மை தன்மையை, தெளிவாக ஆய்வு செய்வது அவசியம்.
குறிப்பாக, கட்டுமான திட்ட அனுமதி தொடர்பாக, அளிக்கப்படும் வரைபடத்தில் திட்ட அனுமதி வழங்கிய அரசு துறையின் முத்திரை, தேதி உள்ளிட்ட விபரங்கள் சரியாக உள்ளதா என்று பாருங்கள்.
திட்ட அனுமதி வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட பரப்பளவும், பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட அளவும் ஒத்து போகிறதா என்றும் பாருங்கள்.
ஒரு இடத்தில், 10 ஏக்கர் நிலத்தை வாங்கிய நிறுவனம், அதில் மொத்தமாக செயல்படுத்தும் குடியிருப்பு திட்டத்துக்கான, மாஸ்டர் பிளான் தயாரித்து இருக்கும்.
ஆனால், அதில் ஒரு பாகத்துக்கு மட்டும், தற்போது திட்ட அனுமதி பெறப்பட்டிருக்கும் என்பதால், அதற்கான வரைபடத்தை மட்டுமே அளிக்கும்.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, முழுமையான திட்டத்தையும் முறையாக பதிவு செய்வது கட்டாயம். இதன்படி, அந்நிறுவனம் செயல்பட்டு உள்ளதா என்று விசாரிப்பது அவசியம் என்கின்றனர், கட்டுமான துறை வல்லுனர்கள்.

