/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீடு கட்ட ஏஏசி பிளாக்குகளை பயன்படுத்த மக்கள் தயங்குவது ஏன்?
/
வீடு கட்ட ஏஏசி பிளாக்குகளை பயன்படுத்த மக்கள் தயங்குவது ஏன்?
வீடு கட்ட ஏஏசி பிளாக்குகளை பயன்படுத்த மக்கள் தயங்குவது ஏன்?
வீடு கட்ட ஏஏசி பிளாக்குகளை பயன்படுத்த மக்கள் தயங்குவது ஏன்?
ADDED : ஏப் 13, 2024 10:22 AM

கட்டுமான பணிகளை விரைவாக, எளிதாக முடிப்பதற்காக பல்வேறு வகையான புதிய பொருட்கள் அறிமுகமாகின்றன. இந்த பொருட்களை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் முறையான வழிகாட்டுதல்கள் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியை திட்டமிடும் போது, அதில் எந்த இடத்தில் என்ன வகை பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை ஆரம்ப நிலையிலேயே திட்டமிடுங்கள். குறிப்பாக, ஆற்று மணலை பயன்படுத்துவதா அல்லது எம் சாண்ட் பயன்படுத்துவதா என்பதை தெளிவாக முடிவு செய்யுங்கள்.
நீங்கள் வீடு கட்டும் பகுதியில் செங்கல் எளிதாக கிடைக்கும் என்றால், அதை பயன்படுத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில், கட்டடம் கட்டப்படும் இடம் ஈரமான மண் உள்ள பகுதியாக காணப்படும் நிலையில் செங்கலை பயன்படுத்தும் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
இது போன்ற சூழலில் உள்ளூரில், எளிதாக கிடைக்கிறதே என்பதற்காக செங்கலை பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இல்லை. நிலத்தின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை நிலைத்து நிற்க செய்யும் வகையிலான மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, ஹாலோ பிளாக்குகள், சாலிட் பிளாக்குகள், ஏஏசி கற்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை புறக்கணிக்காதீர். அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு தகவல்கள் எளிதாக கிடைக்கும் நிலையிலும் ஏஏசி கற்ககளை கட்டுமான பணிக்கு பயன்படுத்துவதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
கட்டுமான பணியில் மாற்று பொருட்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலையில், சில பொறியாளர்களும் கூட ஏஏசி கற்களை பயன்படுத்தினால் செலவு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். ஒரு 9 அங்குல ஏஏசி பிளாக்கை பயன்படுத்தும் இடம் என்பது, 13 செங்கல்களுக்கு இணையானது.
இன்றைய தேதியில் ஒரு செங்கல்லின் விலை என்ன, 13 செங்கல்களை வரிசையாக வைத்து இணைக்க தேவைப்படும் சிமென்ட் கலவை ஆகியவற்றுக்கான செலவை கருத்தில் கொள்ள வேண்டும். ஏஏசி கற்கள் இப்போது தான் வந்துள்ளது, இதை பயன்படுத்தி கட்டடம் கட்டினால் அதன் உறுதி என்ன என்பது உடனடியாக தெரியாது என்றும் கூறப்படுகிறது.
ஏஏசி கற்களை தயாரிக்கும் நிலையில் அது பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கல்லின் மொத்த எடை என்ன, அது எவ்வளவு சுமையை தாங்கும் என்பது அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
உயரமான கட்டடங்கள் கட்டும் போது, எடை குறைந்த கற்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு ஏஏசி கற்கள் சிறந்த மாற்றாக அமைந்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

