/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
நீரூற்று இடத்தில் வீடு கட்டும்போது கவனம்; தாங்குதிறனுக்கு ஏற்ப வடிவமைப்பு அவசியம்
/
நீரூற்று இடத்தில் வீடு கட்டும்போது கவனம்; தாங்குதிறனுக்கு ஏற்ப வடிவமைப்பு அவசியம்
நீரூற்று இடத்தில் வீடு கட்டும்போது கவனம்; தாங்குதிறனுக்கு ஏற்ப வடிவமைப்பு அவசியம்
நீரூற்று இடத்தில் வீடு கட்டும்போது கவனம்; தாங்குதிறனுக்கு ஏற்ப வடிவமைப்பு அவசியம்
ADDED : செப் 27, 2025 12:39 AM

முதலில் ஒரே மாதிரியான கட்டுமான முறையை கையாள்வதை தவிர்த்து, கட்டடங்களின் அமைப்பு மற்றும் நிலத்தின் தன்மைக்கும், மண்ணின் தாங்குதிறனுக்கும் ஏற்ப கட்டுமான முறையை ஒரு அனுபவமிக்க பொறியாளரை கொண்டு வடிவமைக்க வேண்டும். மண் பரிசோதனை மற்றும் கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் போர்வெல் நீரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார் 'காட்சியா' செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
நிலமட்ட தண்ணீர் தொட்டி கட்டும்பொழுது, மண்ணின் தன்மைக்கு ஏற்ப கட்டுமான முறையை செய்ய வேண்டும். மிகவும் கெட்டியான சரளை மற்றும் செம்மண் பூமியாக இருந்தால் செங்கற்களை கொண்டும், இலகுவான மற்றும் களிமண் பூமியாக இருந்தால் கான்கிரீட் கொண்டும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும்.
கலவையிலும், கான்கிரீட்டிலும் வாட்டர் புரூப் கெமிக்கல் சேர்க்க வேண்டும். நீர்நிலைகளுக்கு அருகே அல்லது மழைநீர் தேங்கும் பள்ளமான நிலப்பகுதியிலோ, நீர் ஊற்று வரும் பூமியாக இருந்தால் பேஸ்மட்டத்துக்கு கீழ், அதாவது காலம் புட்டிங், காலம் மற்றும் பேஸ்மட்டம் வரையிலான சுவர்கள் ஆகியவற்றுக்குள் நீர்கசிந்து உட்புகாதவாறு இரண்டு கோட் தார்பூச்சு பூச வேண்டும்.
சுவர் எழுப்ப செங்கல், பிளைஆஷ் பிளாக், சாலிட் பிளாக், ஹாலோ பிளாக், எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் எதுவாயினும் தரமானதாக பார்த்து வாங்க வேண்டும். காலம் மற்றும் சுவர், பீம் மற்றும் சுவர் இணைப்புகளில் வெடிப்புகள் வராமல் தடுக்க வேண்டும்.
சுவர் உட்புறம் மற்றும் வெளிப்புறம் பூச்சு கலவையில் பைபர் ரீன்போர்ஸ்மென்ட் கலந்து பூசினால் பூச்சுகளில் வெடிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். அல்லது ஜிப்சம் மற்றும் ரெடிமிக்ஸ் சிலிக்கான் சாண்ட் பூச்சு பொருட்களை பயன்படுத்தலாம்.
பிளம்பிங் பைப்புகளை பேக் செய்து டைல்ஸ் ஒட்டுவதற்கு முன் பைப்புகளில் 'பிரஷர் டெஸ்ட்' செய்து தண்ணீர் கசிவு ஏதேனும் இருந்தால் சரிசெய்து, அதன் பிறகு கலவை கொண்டு பேக்செய்த பின், டைல்ஸ் ஒட்ட வேண்டும்.
மொட்டை மாடி மற்றும் டாய்லெட் சன்கன் பகுதிகளில் 'வாட்டர் புரூப் கெமிக்கல்' மூன்று முதல் நான்கு கோட்டிங்காவது செய்து, அதன் பின், தளம் மற்றும் டைல்ஸ் பதிக்க வேண்டும். கட்டடங்களுக்கு பட்டி பெயின்ட் அடிக்கும்போது, சுவர் கியூரிங் டைமிற்கு பிறகு சுவர்கள் நன்கு காய்ந்தபின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக பல முன்னணி நிறுவனங்களின் தரமான மெட்டீரியல்களை பயன்படுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.