வீடு வாங்கும் போது கட்டட குறைபாடுகள் விஷயத்தில் கவனம் தேவை!
வீடு வாங்கும் போது கட்டட குறைபாடுகள் விஷயத்தில் கவனம் தேவை!
ADDED : ஆக 29, 2026 07:02 AM

பு திதாக வீடு வாங்கும் போது பத்திரங்கள், வரைபடங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்களை துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும். இதில், அந்த குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படும் நிலம் தொடர்பான வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று முதலில் பாருங்கள்.
இதற்கு அடுத்தபடியாக, அந்த குடியிருப்பு திட்டத்துக்கான வரைபடத்துக்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று பாருங்கள். அந்த வரைபடத்தில், என்ன குறிப்பிடப்பட்டுள்ளது, நிபந்தனைகள் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
பொதுவாக ஒரு புதிய வீட்டை வாங்கும் போது அது கட்டி முடித்த நிலையில் இருந்தால், அதில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா என்று பாருங்கள். சென்னை போன்ற பல்வேறு நகரங்களில் புதிய வீடுகளுக்கு இணையாக பழைய வீடுகள் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது.
இதில் புதிதாக ஒரு வீட்டை வாங்கும் போது ஆவணங்கள், வரைபடங்கள் சரியாக இருந்தால் மட்டும் போதாது. கட்டுமான பணியில் எந்த குறைபாடும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கட்டுமான பொறியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
கட்டுமான துறை தொடர்பான எவ்வித புரிதலும் இல்லாதவர்கள் இந்த விஷயத்தில் எப்படி செயல்படுவது என்ற கேள்வி எழுகிறது. எனவே, புதிய வீடு வாங்குவோர், அதற்கான வரைபடத்தை கட்டுமான பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்வதுடன், அதன்படி கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக, ஒரு கட்டடத்தில் அஸ்திவார துாண்ககள் எந்தெந்த இடத்தில், எப்படி அமைக்கப்பட்டுள்ளது, அந்த துாண்களை இணைக்கும் வகையில் தரை மட்டத்திலும், மேல் மட்டத்திலும் பீம்கள் உரிய இடங்களில் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
துாண்களை இணைக்கும் பீம்கள் ஆதரவு இல்லாமல் கட்டத்தின் மேல் தளத்தில் ஏதாவது பகுதிகள் தனித்து நிற்கிறதா என்று பாருங்கள். துாண்கள், பீம்கள் ஆதரவு இல்லாமல், சற்று நீண்ட அளவில் ஏதாவது பாகங்கள் நீட்டி கொண்டு இருந்தால் அது சுமை பரவல் பிரச்னையை ஏற்படுத்தும்.
கட்டடங்களில், தரைமட்டத்தில் அமைக்கப்பட்ட துாண்களின் தொடர்ச்சி, அதன் அனைத்து தளங்களிலும் சீராக தொடர்கிறதா என்று பாருங்கள்.
இதில் ஏதாவது தளத்தில் துாண்களின் தொடர்ச்சி மாறினால், அந்த கட்டடம் தொழில்நுட்ப ரீதியாக குறைபாடு உடையது என்ற முடிவுக்கு வரலாம்.
இதில், கட்டடங்களில், பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் உட்புற அறைகளின் அமைப்பு உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். உட்புற வடிவமைப்பில் குறைபாடு இருந்தாலும் அந்த கட்டடத்தை வாங்குவதால் பிரச்னையே வரும் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
கட்டடங்களில், தரைமட்டத்தில் அமைக்கப்பட்ட துாண்களின் தொடர்ச்சி, அதன் அனைத்து தளங்களிலும் சீராக தொடர்கிறதா என்று பாருங்கள், இதில் வேறுபாடு இருக்க கூடாது.
