/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீட்டுமனை விலை; இளம் வயதில் மனது வைத்தால் கவலை இல்லை
/
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீட்டுமனை விலை; இளம் வயதில் மனது வைத்தால் கவலை இல்லை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீட்டுமனை விலை; இளம் வயதில் மனது வைத்தால் கவலை இல்லை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீட்டுமனை விலை; இளம் வயதில் மனது வைத்தால் கவலை இல்லை
ADDED : பிப் 01, 2025 09:12 AM

தொழில் நிமித்தமாக இன்று பெரும்பாலானோர் தமது சொந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்து வாழ்க்கையை நடத்திவருகின்றனர். நம் பூர்வீக வீட்டுக்கு என்றாவது ஒரு நாள் செல்லும்போது, நமது மனம் அடைகின்ற நிறைவுக்கு, ஈடு இணை எதுவும் இல்லை எனலாம்.
அதேசமயம், வேறு வழியின்றி வெளியூரில் வசிப்பவர்கள், எவ்வளவு நாளைக்கு வாடகைக்கு வசிப்பது என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அதுபோல், சொந்த வீட்டின் அருமையும், வாடகை வீட்டில்தான் தெரியும்.
கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்க உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது:
சொந்த வீடு என்பது, அந்தஸ்தின் அடையாளம் என்று நினைத்த காலம், இப்பொழுது இல்லை. தற்போது, அது அத்தியாவசியம் என்றாகி விட்டது. எவ்வளவுதான் சம்பாதித்தாலும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு, 'பட்ஜெட்' பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும்.
எனவே, எப்படியாவது சொந்த வீட்டை கட்டியே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும், 40 முதல், 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பர். ஏனெனில் அந்த வயதில் பிள்ளைகளை படிக்கவைத்து, வேலை வாங்கி கொடுத்து, திருமணம் செய்து வைத்து, கடமையை முடித்திருப்பர்.
பின், தனக்கு வரும் ஓய்வூதியம் உள்ளிட்ட, பணப்பலன்களை கொண்டு வீடு கட்டுவர். வீட்டை கட்டி கடனை அடைப்பதற்குள், ஒருவரின் வாழ்நாளே முடிந்துவிடும். அந்த அளவுக்கு வீடு கட்டுவது சவாலானது. இன்றைய பொருளாதார வளர்ச்சியில், 20, 25 என, மிகக்குறைந்த வயதில், ஐ.டி., போன்ற துறைகளில், அதிக சம்பளம் வாங்குகின்றனர்.
எனவே, இந்த இளம் வயதில் வீடு கட்டுவது நல்லது. நாளுக்கு நாள் வீட்டுமனையின் விலையும், கட்டுமான பொருட்களின் விலையும், கூடிக்கொண்டே செல்கிறது.
நம் அனைவராலும் மொத்த பணத்தை, கையில் வைத்துக்கொண்டு வீடு கட்டுவது இயலாதுதான். எனினும், ஒரு சிறு தொகையை முன்பணமாக வைத்துக்கொண்டு, நல்லபடியாக கணக்கு போட தெரிந்தால், கடன் வாங்கி கவலை இல்லாமல் வீடு கட்டிக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.