/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
நெருக்கமான இடத்தில் ரெடிமேடு மதில் சுவர் அமைப்பது சரியா?
/
நெருக்கமான இடத்தில் ரெடிமேடு மதில் சுவர் அமைப்பது சரியா?
நெருக்கமான இடத்தில் ரெடிமேடு மதில் சுவர் அமைப்பது சரியா?
நெருக்கமான இடத்தில் ரெடிமேடு மதில் சுவர் அமைப்பது சரியா?
ADDED : டிச 06, 2025 08:22 AM

சொந்தமாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டும் போது நமக்கான எல்லையை வரையறை செய்வதற்காக மதில் சுவர் கட்ட வேண்டியது அவசியம். நீங்கள் வாங்கிய நிலம் காலியாக இருக்கும்போது அதில் அதிக செலவில் மதில் சுவர் அமைப்பது நல்லதல்ல.
இதனால், பெரும்பாலான மக்கள், முள் கம்பி வேலியை அமைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மனைக்குள் வெளியாட்கள் வந்துவிட கூடாது, வரையறுக்கப்பட்ட எல்லை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மதில் சுவர் அமைக்கப்படுகிறது.
இதில் நீங்கள் வாங்கிய மனையில் வீடு கட்டும் பணிகள் முடியும் நிலையில் சுற்றுப்புற மதில் சுவர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும். இந்நிலையில், நீங்கள் கட்டும் மதில் சுவரின் உள்ளும், வெளியிலும் மண் கொட்டப்படுவது, கட்டடம் கட்டப்படுவது ஆகிய விபரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் வீட்டின் தரைமட்டத்தை உயர்த்தும் நிலையில், மதில் சுவர்கள் தாழ்வாக போய்விட கூடாது. அதே நேரத்தில் உட்புற கட்டடத்தால் ஏற்படும் அழுத்தம் வெளிப்பு சூழலால் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்கும் வகையில் மதில் சுவர் கட்ட வேண்டும்.
பொதுவாக, செங்கல் அல்லது ஹாலோ பிளாக் பயன்படுத்தி மதில் சுவர் கட்டப்படுகிறது. இதில் செலவு குறைப்பு என்ற அடிப்படையில், பிரிகாஸ்ட் முறையில் தயாரிக்கப்படும் ஸ்லாப்களை பயன்படுத்தி மதில் சுவர் அமைக்கும் பழக்கம் பரவலாக அதிகரித்துள்ளது.
வழக்கமான முறையில் சுவர் கட்டும் பணிக்கு ஆகும் செலவில், 50 சதவீத தொகையில் ரெடிமேட் சுவர்களை அமைத்துவிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மனையின் எல்லைக்கும் உட்புறம், வெளிப்புற கட்டடங்களுக்கு இடையே அதிக காலி இடம் இருக்கும் நிலையில் ரெடிமேட் முறையில் மதில் சுவர் அமைக்கலாம்.
ஆனால், கட்டடத்தில் இருந்து ஒரு அடி அல்லது இரண்டு அடி அளவுக்கு மட்டுமே காலியிடம் இருந்தால், அங்கு ரெடிமேடு சுவர் அமைப்பது நல்லதல்ல. செலவை குறைக்க இந்த வழிமுறையை பின்பற்றினால், ஏதாவது பொருட்களை வைப்பது, வாகனங்கள் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் சுவர் உடைய வாய்ப்புள்ளது.
கட்டடங்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில், தரைப் பகுதியில், மண் கொட்டுவது உள்ளிட்ட பணிகளால் ஏற்படும் அழுத்தத்தை தவிர்ப்பதற்காக செங்கல் சுவர்களை அமைப்பது நல்லது. அப்போதும், குறைந்தபட்சம் இரண்டு அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் அமைத்து சுவர் எழுப்ப வேண்டும்.
இத்துடன், 10 அடிக்கு ஒரு இடத்தில் துாண் அமைத்து மதில் சுவர் கட்டுவது பாதுகாப்பான நடைமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது. மதில் சுவர் அமைக்கும் விஷயத்தில் அலட்சியத்தை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
கட்டடங்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில், தரைப் பகுதியில், மண் கொட்டுவது உள்ளிட்ட பணிகளால் ஏற்படும் அழுத்தத்தை தவிர்ப்பதற்காக செங்கல் சுவர்களை அமைப்பது நல்லது.

