/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கிரைய பத்திரத்தை சுருக்கமாக எழுதுவது நல்லதல்ல!
/
கிரைய பத்திரத்தை சுருக்கமாக எழுதுவது நல்லதல்ல!
ADDED : டிச 06, 2025 08:21 AM

வீ டு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் போது அது தொடர்பாக விற்பனையாளரிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் முழுமையாக ஆராய வேண்டும். இதில், சொத்தின் முந்தைய பரிமாற்றங்களில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
உரிமையாளரிடம் இருக்கும் அசல் பத்திரம், அவருக்கு முன் அந்த சொத்து யார் பெயரில் இருந்தது என்பதற்கான பத்திரம் ஆகியவற்றை முறையாக ஆய்வு செய்யுங்கள். இத்துடன், கடந்த, 30 ஆண்டுகளில் அதில் நடந்த பரிமாற்றங்கள் குறித்த விபரங்களை சரி பாருங்கள்.
அந்த சொத்து தொடர்பாக, உரிமையாளர் வங்கியில் கடன் எதுவும் பெற்றுள்ளாரா, ஏற்கனவே பெற்ற கடன் தொடர்பான ஆவண ஒப்படைப்பு அடமானம் முடிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்கனும். இத்துடன் அந்த சொத்துக்கான பட்டா விபரங்களையும் கவனிக்கனும்.
இதில் வில்லங்க சான்றிதழில் உள்ள பரிமாற்ற விபரங்களுக்கும், பட்டா மாறுதல் விபரங்களுக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும். இந்த விபரங்கள் சரிபார்ப்பு அடிப்படையில், உங்கள் பெயரில் சொத்தை உரிமை மாற்றம் செய்வதற்கான கிரைய பத்திரத்தை தயாரிக்க வேண்டும்.
பொதுவாக கிரைய பத்திரம் தயாரிப்பதில் சொத்து வாங்கும் நபர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால், ஆவண எழுத்தர்கள் கடைசியாக பதிவான பத்திரத்தில் இருந்து சொத்து குறித்த விபரங்களையும், அதை தற்போது விற்பவர் குறித்த விபரங்களையும் சேர்த்து கிரைய பத்திரத்தை தயாரித்து கொடுக்கின்றனர்.
ஆனால், கிரைய பத்திரம் தயாரிப்பு நிலையில், சொத்து வாங்குவோர் முழுமையாக கவனம் செலுத்தாத நிலையில் பல்வேறு விபரங்கள் மறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குறிப்பாக ஒரு சொத்து இதுவரை கூட்டு உரிமையில் குடும்ப சொத்தாக இருந்திருக்கலாம்.
அது அந்த குடும்ப உறுப்பினர்களால் தற்போதைய உரிமையாளருக்கு விற்கப்பட்டு இருக்கலாம். இது போன்ற சொத்தை வாங்கும் போது, கூட்டு உரிமை நிலையில் யார் யார் உரிமையாளர்களாக இருந்தனர், அதில் எந்த அடிப்படையில் சொத்தை விற்றனர் என்பது போன்ற விபரங்கள் புதிதாக எழுதப்படும் கிரைய பத்திரத்தில் இடம் பெற வேண்டும்.
பக்கத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும், என்று கூறியும் தேவையில்லாதவை என்றும் பல்வேறு தகவல்களை தவிர்த்து சுருக்கமாக கிரைய பத்திரம் எழுத ஒப்புக்கொள்ளாதீர். சொத்து குறித்த தேவையான முன் தகவல்கள் பத்திரத்தில் இடம் பெற வேண்டியது அவசியம்.
குறிப்பாக, ஊரக பகுதியில் இருந்த சொத்து தற்போது நகர சர்வே முறைக்கு மாறியிருந்தால் அது தொடர்பான கூடுதல் விபரங்களையும் கிரைய பத்திரத்தில் சேர்க்க வேண்டும். இது போன்ற விபரங்களை சேர்ப்பதுடன், அதில் பிழைகள் எதுவும் உள்ளதா என்பதையும் சரிபார்ப்பது அவசியம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
கிரைய பத்திரம் தயாரிப்பு நிலையில், சொத்து வாங்குவோர் முழுமையாக கவனம் செலுத்தாத நிலையில் பல்வேறு விபரங்கள் மறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

