/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கட்டடத்தின் தரை மட்டம் உயரும் போது உட்புறத்தை உறுதியாக்குவது எப்படி?
/
கட்டடத்தின் தரை மட்டம் உயரும் போது உட்புறத்தை உறுதியாக்குவது எப்படி?
கட்டடத்தின் தரை மட்டம் உயரும் போது உட்புறத்தை உறுதியாக்குவது எப்படி?
கட்டடத்தின் தரை மட்டம் உயரும் போது உட்புறத்தை உறுதியாக்குவது எப்படி?
ADDED : டிச 06, 2025 08:19 AM

பொதுவாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு கட்டுவோர், கட்டடத்தின் தரை மட்டத்தை உயரமாக அமைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். குறிப்பாக, இத்தகைய பகுதிகளில் புதிதாக கட்டட அனுமதி வழங்கும் நிலையில், அங்கு கடைசியாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உயரம் கருத்தில் கொள்ளப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பகுதியில் அதிகபட்சமாக எவ்வளவு உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியது என்ற விபரம் நீர்வளத்துறையால் சேகரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அங்குபுதிய கட்டடத்துக்கு தரை மட்ட உயரம் என்னவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப் படுகிறது.
இதில், சாலையின் தரை மட்டத்தைவிட, வீட்டின் தரைமட்டம், குறைந்தபட்சம் 3 அடி உயரமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். கட்டுமான பணியின் போது இதை கருத்தில் வைத்து வீட்டின் உயரத்தை அதிகரிக்கின்றனர்.
அந்த குறிப்பிட்ட பகுதியில் சாலையின் தற்போதைய தரை மட்டத்தை மட்டும் பார்த்து அதற்கு ஏற்ப வீட்டின் உயரத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இவ்வாறு வீட்டின் தரைமட்ட உயரத்தை அதிகரிக்கும் போது குறிப்பிட்ட சில பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, பிளிந்த் பீம் பகுதிக்கு மேல் வீட்டின் தரை மட்டத்துக்கான சுவர் எழுப்பும் போது அதற்கு உட்புற பகுதியை மண் கொட்டி நிரப்புவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதில், சரளை மண் போன்றவற்றை கொட்டும் போது உட்புற பகுதியின் உயரம் என்ன என்று பார்க்க வேண்டும்.
பெரும்பாலும், இந்த இடத்தை நிரப்புவதில் என்ன வகை மண்ணை கொட்ட போகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். கட்டட கழிவுகள், களி மண் ஆகியவற்றை தவிர்த்து சரளை மண்ணை கொட்டுவது நல்லது.
அதிலும், அதிக உயரத்துக்கு நிரப்ப வேண்டிய நிலையில், முதலில், இரண்டு அடிக்கு மண் கொட்டி, தண்ணீர் ஊற்றி இறுக்கமாக்க வேண்டும். அதன் பின், அடுத்த இரண்டு அடிக்கு மண் கொட்டி இறுக்கம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
இது போன்று, கட்டடத்தை உயரமாக அமைக்கும் போது, தரை மட்டம் வரை சரளை மண் கொட்டி நிரப்புவதுடன், தரை பகுதியில் கம்பி கட்டி கான்கிரீட்போட்டு தரை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் மண் அடுக்கில் குறைபாடு ஏற்பட்டாலும் கட்டடத்தின் தரைமட்டம் உறுதியாக நிலைத்து நிற்கும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

