நவீன முறை கட்டடங்களில் முற்றம் அமைப்பது சாத்தியமா?
நவீன முறை கட்டடங்களில் முற்றம் அமைப்பது சாத்தியமா?
ADDED : ஜூலை 11, 2026 06:41 AM

இன்றைய சூழலில் கட்டுமான துறையில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு புதிய வழிமுறைகள் வந்துவிட்டன. நவீன முறையில் வீடுகள் வடிவமைக்கப்படுவதால், பழைய வடிவமைப்புகள் மறைந்து வருகின்றன.
முந்தைய காலங்களில் கட்டப்பட்டு இப்போதும் நிலைத்து நிற்கும் வீடுகளை சென்று பார்த்தால் அங்கு வீட்டுக்குள் மையப்பகுதியில் முற்றம் என்ற அமைப்பு இருக்கும். ஒரு காலத்தில் முற்றம் வைத்து மட்டுமே வீடுகள் கட்டப்பட்டு வந்தன.
ஆனால், தற்போது, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பழக்கம் வந்த நிலையில், முற்றம் வைத்து வீடுகள் கட்டப்படுவது வெகுவாக குறைந்துவிட்டது. முந்தைய காலங்களில் முற்றம் போன்ற வசதிகள் இல்லாமல் வீடுகள் வடிவமைப்பதே இல்லை.
இன்றைய சூழலில், கட்டட வடிவமைப்பில் வந்துள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக வீடுகளில் முற்றம் அமைக்கும் பழக்கம் வழக்கொழிந்துவிட்டது. இருப்பினும், தற்போதைய வீடுகள் வடிவமைப்பிலும் முற்றம் அமைக்க முடியும் என்பதை சிலர் கட்டுமான பொறியாளர்கள் உறுதிபடுத்துகின்றனர்.
தற்போதைய சூழலில், தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு எதுவானாலும், அதில் மையப்பகுதியில், உரிய இடம் ஒதுக்கினால், முற்றம் அமைக்கலாம். பெரும்பாலான கட்டடங்களில் குறிப்பிட்ட அளவு இடம் ஓப்பன் டூ ஸ்கை எனப்படும் ஓ.டி.எஸ்., ஆக விடப்படுகின்றன.
இதை சற்று விரிவாக்கி, கலைநயத்துடன் வடிவமைத்தால் நவீன கட்டடங்களிலும் முற்றத்தை அமைத்துவிடலாம். குறிப்பாக, பழங்கால கட்டடங்களில் முற்றம் என்றால் வீட்டின் மத்தியில் காணப்படும் திறந்தவெளி பகுதி, அதன் நான்கு பக்கத்திலும் அழகிய துாண்கள் தான் மறக்க முடியாத விஷயமாக இருக்கும்.
தற்போது, கட்டப்படும் கட்டடங்களில் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய மரத்துாண்களை எப்படி அமைக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பு தான். இதை கருத்தில் வைத்து கான்கிரீட்டை பயன்படுத்தி கலை வேலைபாடுகளுடன் துாண்கள் அமைக்க முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
நவீன கட்டடங்களில் முற்றம் அமைக்கும் போது, அது சார்ந்த பாரம்பரிய பயன்பாடுகள் அதிகரிப்பதுடன், வீடுகளில் வெளிச்சம், காற்றோட்டம் வெகுவாக அதிகரிக்கும். இதனால், வீட்டை பயன்படுத்துவோரின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வாய்ப்பு ஏற்படும்.
கட்டடங்களின் வடிவமைப்பு மாறிவிட்டதால், பாரம்பரிய வசதிகள் கிடைக்காது என்று நினைக்க வேண்டாம். தற்போதைய சூழலிலும், முறையாக திட்டமிட்டால் முற்றம் போன்ற பாரம்பரிய வசதிகளை பெறலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
நவீன முறை கட்டடங்களில் முற்றம் அமைக்கும் போது, அது சார்ந்த பாரம்பரிய பயன்பாடுகள் அதிகரிப்பதுடன், வீடுகளில் வெளிச்சம், காற்றோட்டம் வெகுவாக அதிகரிக்கும்.
