நீர்வளம் பார்க்காமல் நிலம் வாங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
நீர்வளம் பார்க்காமல் நிலம் வாங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
ADDED : ஜூலை 11, 2026 06:43 AM

இன்றைய சூழலில் ஒவ்வொருவருக்கும் சொத்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பதில் ஆசை, ஏக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் போது மக்கள் பல்வேறு விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
உங்கள் சொத்த தேவைக்காக நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அது சார்ந்த விஷயங்களில் இறங்கும் முன் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, என்ன தேவைக்காக நிலம் வாங்க போகிறோம் என்பதில் ஆரம்ப நிலையிலேயே தெளிவான முடிவு எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் வீடு கட்டி குடியேறுவதற்கான வீட்டு மனை வாங்குவது என்றால், அதற்கு ஏற்ப அடிப்படை விஷயங்களை திட்டமிட வேண்டும். நகர், ஊரமைப்பு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் உள்ள வீட்டு மனையை மட்டுமே வாங்க வேண்டும்.
வீடு கட்டுவது தவிர்த்து, தோட்டம் வைப்பது போன்ற தேவைகளுக்காக நிலம் வாங்குவதானாலும், அதற்கான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தோட்டம் வைத்து பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிலம் வாங்கும் போது அது விவசாய வகைப்பாட்டில் இருந்தால் பரவாயில்லை.
ஆனால், அந்த நிலத்துக்கு சென்று வருவதற்கான முறையான பாதை வசதி சரியாக இருக்க வேண்டும். இது விஷயத்தில் தற்காலிக அடிப்படையில், அடுத்தவர் நிலம் வாயிலாக சென்று வருவதற்காக பாதை காட்டப்பட்டால், அதை ஏற்பது எதிர்காலத்தில் பிரச்னையை ஏற்படுத்தும்.
பிரதான சாலையில் இருந்து அந்த நிலத்துக்கு வாகனங்கள் சென்று வரும் அளவுக்கு போதிய அளவில் சாலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். இது மட்டுமல்லாது, அந்த நிலத்தில் தண்ணீர் வளம் எப்படி இருக்கிறது என்று பார்த்து முடிவு செய்யுங்கள்.
தோட்டம் அமைப்பது போன்ற நோக்கத்தில் நிலம் வாங்கும் போது அதற்கு இயல்பாகவே தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். எனவே, நீங்கள் வாங்கும் நிலத்தில் நீர்வளம் எப்படி இருக்கிறது என்பதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து முடிவுகள் எடுக்க வேண்டும்.
காலி நிலம் வாங்கும் போது அதில் எப்படி நிலத்தடி நீர்வளத்தை ஆய்வு செய்வது என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அந்த நிலம் அமைந்துள்ள பகுதியில் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகள், போர்வெல் ஆகியவற்றில் எவ்வளவு ஆழத்தில் நீர் கிடைக்கிறது என்று பாருங்கள்.
அந்த தண்ணீர் பயன்படுத்தும் தரத்தில் இருக்கிறதா அல்லது உப்பு தன்மை அதிகமாக காணப்படுகிறதா என்பதை விசாரித்து அறிய வேண்டும். குறிப்பாக, நிலத்தடி நீர்வளம் வெகுவாக குறைந்த இடத்தில் நிலம் வாங்குவது உரிய பயன் அளிக்காது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
காலி நிலம் வாங்கும் போது அது, அமைந்துள்ள பகுதியில் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகள், போர்வெல் ஆகியவற்றில் எவ்வளவு ஆழத்தில் நீர் கிடைக்கிறது என்று பாருங்கள்.
