/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
இன்றைய சூழலில் சொத்து மதிப்பீட்டாளரின் வழிகாட்டுதல் அவசியமா?
/
இன்றைய சூழலில் சொத்து மதிப்பீட்டாளரின் வழிகாட்டுதல் அவசியமா?
இன்றைய சூழலில் சொத்து மதிப்பீட்டாளரின் வழிகாட்டுதல் அவசியமா?
இன்றைய சூழலில் சொத்து மதிப்பீட்டாளரின் வழிகாட்டுதல் அவசியமா?
ADDED : அக் 11, 2025 07:10 AM

சொந்தமாக வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான சரியான வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு கட்ட பணிகளையும் மேற் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
குறிப்பாக, இன்றைய சூழலில் மோசடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி சிலர் தொடர்ந்து புதிய புதிய வழிகளில் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
பொதுவாக, வீடு, மனை வாங்க வேண்டும் என்றால் அதற்கான அடிப்படை விஷயங்களை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைவருக்கும் இந்த விஷயங்கள் தெரியும் என்று கூற முடியாது என்பதால், விபரம் அறிந்தவர்களின் வழிகாட்டுதல்களை பெறுவது நல்லது.
குறிப்பாக ஒரு சொத்தை வாங்கும் முன் அது தொடர்பாக சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதில், சொத்து குறித்த பத்திரங்கள் உண்மையானவையா, அதில் வில்லங்கம் எதுவும் உள்ளதா என்பதை வழக்கறிஞர்கள் வாயிலாக ஆய்வு செய்து அறியலாம்.
கட்டடத்தின் உறுதி தன்மை சரியாக உள்ளதா என்பதை கட்டட அமைப்பியல் பொறியாளர் ஆய்வு வாயிலாக அறியலாம். அது போன்று விற்பனைக்கு வரும் சொத்தின் விலை தொடர்பான விபரங்களை எப்படி தெரிந்து கொள்வது என்பதில் யானை அணுகுவது என்பது மக்களுக்கு புரியவில்லை.
தற்போதைய நிலவரப்படி, ரியல் எஸ்டேட் சொத்துக்கள் தொடர்பான விலை குறித்த ஆய்வுகளை அறிய மதிப்பீட்டாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். சொத்து வாங்குவோர் வங்கிக்கடனுக்கு விண்ணப் பிக்கும் போது, அந்த சொத்து தொடர்பாக ஆவணத்தில் தெரிவிக்கப்படும் விலை சரியானது தானா என்பதை அறிய மதிப்பீட்டாளர்களை வங்கிகள் பயன்படுத்துகின்றன.
இதில் வங்கிகள் தங்களுக்கு தேவையான தகவல்களுக்காக மட்டுமே மதிப்பீட்டாளர்களை பயன்படுத்தும் என்பதால், இதில் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியாது. எனவே, விற்பனைக்கு வரும் சொத்தின் விலை தொடர்பான உண்மை நிலவரத்தை அறிய வேண்டும் என்றால், நீங்களே மதிப்பீட்டாளரை அணுக வேண்டும்.
விற்பனைக்கு வந்துள்ள சொத்து தொடர்பான ஆவணங்களையும், சந்தை நிலவர விபரங்களையும் மதிப்பீட்டாளர்கள் ஆய்வு செய்வர். அதில் அந்த சொத்துக்கு தற்போது தெரிவிக்கப்படும் விலையில், நிலத்துக்கான பங்கு என்ன, கட்டடத்துக்கான மதிப்பு என்ன என்பது தெரிந்துவிடும்.
இந்த அடிப்படை விபரங்கள் தெரிந்து விட்டால் மக்கள் எவ்வித குழப்பமும் இன்றி சொத்துக்களை வாங்கலாம் என்கின்றனர் சொத்து மதிப்பீட்டாளர்கள்.