/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
சரியான வடிவமைப்பு, வேலைப்பாடு, தரம்.. உறுதியான இல்லத்துக்கான மூன்று ரகசியங்கள்
/
சரியான வடிவமைப்பு, வேலைப்பாடு, தரம்.. உறுதியான இல்லத்துக்கான மூன்று ரகசியங்கள்
சரியான வடிவமைப்பு, வேலைப்பாடு, தரம்.. உறுதியான இல்லத்துக்கான மூன்று ரகசியங்கள்
சரியான வடிவமைப்பு, வேலைப்பாடு, தரம்.. உறுதியான இல்லத்துக்கான மூன்று ரகசியங்கள்
ADDED : செப் 27, 2025 12:43 AM

கனவு இல்லம் பல வருடங்கள் வலிமையுடன் நிலைத்து நிற்க, கான்கிரீட்டும், கம்பியும் இணைந்தால்தான் சாத்தியம்.
கான்கிரீட்டானது அழுத்தத்தை நன்றாக தாங்கும். ஆனால், இழுவை சக்தியை தாங்க முடியாது. உதாரணமாக, ஒரு பீம் மேலிருந்து எடையை சந்திக்கும்போது, கீழ்பகுதியில் உடைபடும் அபாயம் உள்ளது.
அங்கு கம்பி இருந்தால் உடைப்பு தடுக்கப்படும். எளிமையாக சொன்னால் கான்கிரீட் அழுத்தத்தை தாங்கும் கம்பி இழுவையையும் தாங்கும். இரண்டும் சேர்ந்தால்தான் வீடு உறுதியாய் இருக்கும் என்கிறார், கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்க உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (கொஜினா) ராஜ்குமார்.
அவர் நம்மிடம் மேலும் பகிர்ந்துகொண்டதாவது...
எடை மற்றும் தாக்கங்களை கணக்கிட்டு எவ்வளவு தடிமன் கம்பி தேவை, எவ்வளவு இடைவெளியில் வைக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது. இதற்காக, IS 456:2000 போன்ற இந்திய தரநிலைகள் பின்பற்றப்படுகின்றன.
வரைபடத்தை பின்பற்றணும் எவ்வளவு கம்பி போட வேண்டும் என்பதை கணக்கிடுவது ஸ்டிரக்சுரல் இன்ஜினியரின் வேலை. வடிவமைப்பு சிறப்பாக இருந்தாலும், வேலைப்பாடு தவறானால் வீடு பாதிக்கப்படும். கம்பிகளை எப்படி தாழ்வாகவோ, வளைப்பாகவோ வைக்க வேண்டும் என்று வரைபடத்தில் சொல்லியிருப்பதை பின்பற்றியே, வேலை செய்ய வேண்டும்.
கம்பியின் மேல் 'கவர் பிளாக்' வைத்து கான்கிரீட்டுக்குள் மறைக்க வேண்டும். கான்கிரீட் போடும் போது நேரத்தில் கம்பிகள் அசையாமல், வரைபடத்தில் காட்டிய இடத்திலேயே நிலைத்திருக்க வேண்டும். கம்பிகளை இணைக்கும்போது போதுமான நீளத்தில் ஒன்றோடொன்று மேலோடும் வகையில் வைக்க வேண்டும்.
இந்த இணைப்பு குறைவாக இருந்தால், பீம் அல்லது துாண் பலவீனமடைந்து, உடைந்து போகும் அபாயம் அதிகரிக்கும். ஒரு வீட்டின் ஆயுள் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தில்தான் இருக்கிறது. ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன், பழையதாக இல்லாமல் புதிய சிமென்ட் பைகள் பயன்படுத்த வேண்டும். சரியான வடிவமைப்பு, சரியான வேலைப்பாடு, சரியான தரம் ஆகிய மூன்றும் இருந்தால் தான், உங்கள் வீடு பல ஆண்டுகள் அல்ல, பல தலைமுறைகளுக்கும், வலிமையுடன் நிம்மதியாக நிற்கும். உறுதியான வீடு தலைமுறைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.