/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
சொத்தில் எல்லைகள் குறிப்பிடாமல் பதிவான பத்திரங்களால் ஏற்படும் சிக்கல்கள்!
/
சொத்தில் எல்லைகள் குறிப்பிடாமல் பதிவான பத்திரங்களால் ஏற்படும் சிக்கல்கள்!
சொத்தில் எல்லைகள் குறிப்பிடாமல் பதிவான பத்திரங்களால் ஏற்படும் சிக்கல்கள்!
சொத்தில் எல்லைகள் குறிப்பிடாமல் பதிவான பத்திரங்களால் ஏற்படும் சிக்கல்கள்!
ADDED : பிப் 17, 2024 08:51 AM

பொதுவாக ஒரு சொத்து விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதற்கான கிரையப்பத்திரம் அனைத்து விபரங்களுடன் தெளிவாக எழுதப்பட வேண்டும். கிரையப்பத்திரத்தில் அந்த சொத்து குறித்த விபரங்கள் என்ன இருக்கிறது என்பதை பொறுத்தே அதன் மீதான நம்பகத்தன்மை அமையும்.
சொத்தை விற்பவர் யார், அவர் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் அல்லது பான் எண் ஆகிய விபரங்களை பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். அது போன்று, சொத்து வாங்குபவர் குறித்த அடிப்படை தகவல்களும் பத்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்படும்.
இதற்கு அப்பால், சம்பந்தப்பட்ட சொத்து தற்போதைய உரிமையாளருக்கு எப்படி வந்தது, அதை விற்பதற்காக அவருக்குள்ள உரிமை குறித்த விபரங்கள் இடம் பெறும். இதை தொடர்ந்து விற்பனையாகும் சொத்தின் நான்கு எல்லைகள் உள்ளிட்ட விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
ஆனால், குறிப்பிட்ட சில இடங்களில் சொத்தின் முந்தைய தாய் பத்திரத்தை ஆய்வு செய்தால், அதில் சொத்தின் நான்கு எல்லை விபரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்காது. சொத்தின் நான்கு எல்லைகள் இருந்தால் தான் அது எங்கு, எப்படி அமைந்துள்ளது என்பதை உறுதி செய்ய முடியும்.
இதில், நான்கு எல்லைகளை குறிப்பிடாமல் பதிவான பத்திரங்களை ஆய்வு செய்யும் போது, கள நிலையில் அந்த சொத்தை தேடி கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படும். முந்தைய காலத்தில், ஒரு கிராமத்தில் ஒரு சர்வே எண்ணுக்கு உரிய முழு நிலமும் உட்பிரிவு செய்யப்படாமல் ஒரே நபர் பெயரில் இருக்கும்.
இத்தகைய நிலத்தை அதன் உரிமையாளர் விற்கும் போதும், வாரிசுகளுக்கு கொடுக்கும் பொதும், எழுதப்படும் பத்திரத்தில் கிராம், சர்வே எண் குறிப்பிட்டு அது முழுதும் என்று குறிப்பிடுவர். இந்த சர்வே எண்ணுக்கான நிலத்தின் நான்கு எல்லைகள் குறிப்பிடப்படமாட்டாது.
இவ்வாறு எல்லைகள் குறிப்பிடாமல் பதிவாகும் கிரையப்பத்திரங்கள் இன்றும் பல இடங்களில் புழக்கத்தில் உள்ளன. சொத்தை விற்பவர் எந்த மோசடியிலும் ஈடுபடமாட்டார் என்ற நம்பகத்தன்மை இருக்கும் வரை இதில் பிரச்னை இல்லை.