/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
சாலை சந்திப்பு அருகில் மனை வாங்குவோர் சந்திக்கும் பிரச்னைகள்!
/
சாலை சந்திப்பு அருகில் மனை வாங்குவோர் சந்திக்கும் பிரச்னைகள்!
சாலை சந்திப்பு அருகில் மனை வாங்குவோர் சந்திக்கும் பிரச்னைகள்!
சாலை சந்திப்பு அருகில் மனை வாங்குவோர் சந்திக்கும் பிரச்னைகள்!
ADDED : ஜூலை 20, 2024 08:05 AM

இன்றைய சூழலில், வெளியூரில் எதிர்கால தேவைக்காக என்ற எண்ணத்தில் வீட்டு மனை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் எத்தகைய மனையை வாங்க வேண்டும் என்பதில் மிகமிக தெளிவுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, ஒரு மனைப்பிரிவை நேரில் சென்று பார்வையிட்டு அதில் ஒரு மனையை தேர்வு செய்யும் நிலையில், அதன் அமைவிட விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் மனைப்பிரிவில் முதல் வரிசையில் பிரதான சாலையை ஒட்டி இருக்கும் மனைகளை தேர்வு செய்கின்றனர்.
மக்களின் இந்த ஆர்வத்தை பார்த்து பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், முதல் வரிசை மனைகளின் விலையை அதிகரிக்கின்றன. பிரதான சாலையை ஒட்டி, முதல்வரிசையில் இருக்கும் மனை என்றால், அதன் மதிப்பு விரைவாக அதிகரிக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரும்பாலான பகுதி களில் இப்படி முதல் வரிசை மனைகளை வாங்கியவர்கள் லாபம் அடைவதில்லை, அதற்கு மாறாக சாலை விரிவாக்கம் போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, ஒரு மனைப்பிரிவை பார்வையிடும் நிலையில், அதில் எந்த இடத்தில் இருக்கும் மனை நமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று பார்க்க வேண்டும்.
பிரதான சாலை, நான்கு முனை சந்திப்பு ஆகிய இடங்களில் வீட்டு மனையை வாங்கினால், கட்டடம் கட்டினால் கூடுதல் வாசல் கிடைக்கும், வணிக ரீதியாக மதிப்பு உயரும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஒரு கட்டத்தில் இதுபோன்ற மனைகளை வாங்கி அதில் கடைகளை கட்டினால் அதிக வாடகை கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது.
இந்த ஒரு சாதகமான விஷயத்தை மட்டும் நம்பி மனை வாங்கும் முடிவை இறுதி செய்யாதீர் என்று நகரமைப்பு வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற மனைகள் ஒரு வகையில் லாபத்தை அளித்தாலும், வேறு சில வகைகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நான்குமுனை சந்திப்பு களில் மனை வாங்கி, வணிக ரீதியாக மேம்படுத்தி அதிக லாபம் பார்க்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், உட்புறப் பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகளை நீங்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக, சாலை விரிவாக்கம், மேம்பாலம் கட்டுதல் போன்ற வளர்ச்சிப் பணிகளின்போது, இதுபோன்ற இடங்கள்தான் முதலில் கையகப்படுத்தப்படும். ஆனால், உட்புறப் பகுதிகளில் உள்ள மனைகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் இல்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.