டூப்ளக்ஸ் வீடு கட்டும் போது வடிவமைப்பில் கவனிக்க வேண்டியவை!
டூப்ளக்ஸ் வீடு கட்டும் போது வடிவமைப்பில் கவனிக்க வேண்டியவை!
ADDED : ஜூன் 20, 2026 07:39 AM

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், தனி வீடு கட்ட வேண்டும் என்பதில் மக்களின் ஆர்வம் குறையவில்லை. இதனால், பிரதான நகரங்களுக்கு வெளியில் இருந்தாலும் பரவாயில்லை என்று நிலம் வாங்கி வீடு கட்ட மக்கள் விரும்புகின்றனர்.
இந்த வகையில், நகரங் களுக்கு வெளியில் சிறிய கிராமங்களில் நிலம் வாங்குவோர் அதில் தனி வீடு கட்டும் போது அதன் வடிவமைப்பு சார்ந்த எதிர்பார்ப்புகள் மாறியுள்ளன. ஒரு காலத்தில் அதிக பரப்பளவு நிலத்தின் மையப்பகுதியில் தரைதளம் மட்டும் கொண்டதாக வீடு கட்ட மக்கள் விரும்பினர்.
ஆனால், தற்போது, குறைந்த பரப்பளவு நிலம் கிடைத்தாலும் பரவாயில்லை, அதில் டூப்ளக்ஸ் வகை வீடுகள் கட்ட வேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இதை புரிந்து கொண்ட கட்டுமான நிறுவனங்களும், காலி மனையை விற்பதற்கு பதில், அதில் டூப்ளக்ஸ் வீடுகள் கட்டி விற்பனை செய்கின்றனர்.
இது போன்று ஏற்கனவே வடிவமைத்து கட்டப்பட்ட டூப்ளக்ஸ் வீடுகளை வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இத்தகைய வீடுகளை வாங்கும் நிலையில், டூப்ளக்ஸ் வீடுகள் என்றால் என்ன, அதில் இருக்க வேண்டிய வசதிகள் என்ன என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக, ஒரே உரிமையாளர், இரண்டு தளங்களையும் பயன்படுத்தும் வகையில், வடிவமைக்கப்படுவது தான் டூப்ளக்ஸ் வீடுகள். ஒரு குறிப்பிட்ட மனையில், தரைதளம், முதல் தளம் என இரண்டு பகுதிகளையும் ஒரே குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் இது கட்டப்படுகிறது.
இத்தகைய வீடுகளில், தரைதளத்தில் வரவேற்பு அறை, சமையலறையை மட்டும் வைத்துவிட்டு, மேல் தளத்தில் படுக்கை அறைகள் அமைக்கப்படும். மேல் தளத்துக்கு செல்வதற்கான படிக்கட்டுகள் அல்லது லிப்ட் வசதிகள் வீட்டுக்குள்ளேயே அமைக்கப்படும்.
தற்போதைய நிலையில், டூப்ளக்ஸ் வீடுகள் கட்ட வேண்டும் என்றால் அதற்கு அதிக பரப்பளவு நிலம் தேவை என்ற எண்ணம் நிலவுகிறது. உண்மையில், இரண்டு சென்ட் அதாவது, 800 சதுரடி நிலம் இருந்தால் போதும் அதில் அழகிய வடிவமைப்பில் டூப்ளக்ஸ் வீடுகள் கட்டலாம்.
நீங்கள் நிலம் வாங்கி அதில் டூப்ளக்ஸ் வீடு கட்டுவதாக இருந்தால், தரைதளத்தில், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியை உறுதி செய்வது அவசியம். உங்களிடம் அதிக வாகனங்கள் இருக்கும் நிலையில், தரைதளத்தை வாகன நிறுத்தமாக விட்டு, முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் வீடு கட்டலாம்.
ஏற்கனவே, கட்டி முடிக்கப்பட்ட டூப்ளக்ஸ் வீடுகளை வாங்குவதாக இருந்தால், அதற்கான திட்ட அனுமதி வரைபடம் உட்பட பல்வேறு ஆவணங்களை துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக கட்டட அனுமதி பெறப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
***
பாயிண்ட்
***
நீங்கள் நிலம் வாங்கி அதில் டூப்ளக்ஸ் வீடு கட்டுவதாக இருந்தால், தரைதளத்தில், வாகனங்கள் நிறுத்து வதற்கான இடவசதியை உறுதி செய்வது அவசியம்.
