/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
பட்டாவில் பெயர் மாற்றத்துக்கு பின் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
/
பட்டாவில் பெயர் மாற்றத்துக்கு பின் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
பட்டாவில் பெயர் மாற்றத்துக்கு பின் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
பட்டாவில் பெயர் மாற்றத்துக்கு பின் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
ADDED : அக் 18, 2025 09:14 AM

வீ டு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் போது அதற்கான ஆவணங்களை சரிபார்ப்பது, முறையாக கிரைய பத்திரம் தயாரித்து பதிவு செய்வதில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். இதில் பெரும்பாலான மக்கள், விற்பனைக்கு வரும் சொத்துக்கு பட்டா இருக்கிறதா என்ற விஷயத்தை விசாரிக்கின்றனர்.
ஆனால், அந்த பட்டா தற்போதைய உரிமையாளர் பெயரில் இருக்கிறதா என்பதை விசாரிப்பதில்லை. சொத்துக்கு பட்டா இருந்தால் போதும், அது யார் பெயரில் இருந்தால் என்ன பத்திரப்பதிவு முடிந்த பின் நம் பெயருக்கு மாற்றப்படும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
உண்மையில் சொத்து வாங்கும் போது, அதை விற்பவர் பெயரில் பட்டா இருக்க வேண்டும் என்பதில், எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. பெரும்பாலான இடங்களில் சொத்து விற்பவருக்கு முந்தைய நிலையில், பல்வேறு நபர்கள் இணைந்த கூட்டு பட்டா இருக்கும்.
அதன் பிரதியை ஆதாரமாக வைத்து கொண்டு தற்போதைய உரிமையாளர் இருப்பார். ஆனால், இத்தகைய சொத்தை வாங்கும் நபர், பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் போது, கூட்டு பட்டாவில் காணப்படும் பரப்பளவுக்கு குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது.
சில இடங்களில் புதிதாக சொத்து வாங்குவோர் பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் அவர் பெயருக்கு தனியாக பட்டா வழங்காமல், கூட்டு பட்டாவில் அவரது பெயர் இணைக்கப்பட்டுவிடுகிறது. இதனால், பட்டாவில் தங்களுக்கான பங்கு என்ன என்பதை துல்லியமாக கணக்கிடுவதில் பிரச்னை ஏற்படுகிறது.
இந்நிலையில், புதிதாக சொத்து வாங்கும் மக்கள் இ - சேவை மையங்கள் வாயிலாக பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பித்த நபர்களுக்கு வழங்கப்படும் பட்டாவில் உரிய விபரங்கள் முறையாக மாற்றப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
சில இடங்களில் தனி பட்டா வைத்துள்ள உரிமையாளரிடம் சொத்து வாங்கியவர், தன் பெயருக்கு பட்டாவை மாற்ற கோரி விண்ணப்பிக்கிறார். இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, புதிய உரிமையாளர் பெயரில் பட்டா வழங்கப்பட வேண்டும்.
ஆனால், வருவாய் துறையில் உள்ள சில அலுவலர்கள், பெயர் மாற்றம் அடிப்படையில் புதிய உரிமையாளர் பெயருடன் பழைய உரிமையாளர் பெயரையும் சேர்த்து பட்டா கொடுக்கின்றனர். இத்தகைய பட்டாவை பெற்றவர் அதில் திருத்தம் கோரி மீண்டும் அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பொதுவாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதைவிட, அதில் திருத்தங்கள் செய்வதற்கான பணிகள் மிகவும் சிக்கலானவையாக உள்ளன. இதற்காக விண்ணப்பித்தால், சில ஆண்டுகள் வரை கூட அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதால், மக்கள் இதில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உங்கள் சொத்துக்கான பட்டாவில், பழைய உரிமையாளர் பெயர் வேண்டுமென்றே தவறுதலாக சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளன.
இதில் திருத்தம் கோரி நீங்கள் அளிக்கும் விண்ணப்பம் கிடப்பில் போடப்பட வாய்ப்பு உள்ளதால், நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர், ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
பட்டாவில் கவனிக்க வேண்டியவை
1 உங்கள் சொத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றத்துக்கு பின் சர்வே எண், உட்பிரிவு எண் அதில் சரியாக உள்ளதா?
2 மனையின் பரப்பளவு சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா?
3 பத்திரத்தில், பழைய பட்டாவில் உள்ள அளவுகள் இத்துடன் பொருந்துகின்றனவா?
4 மனையின் உரிமையாளர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் சரியாக இடம் பெற்றுள்ளதா?
5 தாலுகா, கிராம பெயர் விபரங்கள் சரியாக உள்ளனவா?