/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
வீடு பராமரிப்பு
/
டெங்கு கொசுவைக் கண்டறிவது எப்படி?
/
டெங்கு கொசுவைக் கண்டறிவது எப்படி?
UPDATED : செப் 14, 2023 03:55 PM
ADDED : செப் 14, 2023 03:54 PM

மழைக்காலம் துவங்கிவிட்டது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறார் முதல் முதியோர்வரை பல்வேறு வயதினர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். டெங்கு வைரஸின் வீரியம் தற்போது அதிகரித்து காணப்படுவதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களது உயிரைப் பறிக்கும் ஆபத்தான வைரஸ் காய்ச்சலாக டெங்கு காய்ச்சல் மாறி வருகிறது. தமிழக சுகாதாரத் துறை போதுமான அளவு டெங்கு தடுப்பு மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் இருப்பில் வைத்திருப்பதாகக் கூறினாலும் டெங்கு குறித்த அச்சம் மக்களை பீதியடையச் செய்கிறது. டெங்குவை உண்டாக்கும் கொசு ரகத்தைப் பற்றிய தகவல்களை நாம் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஏடஸ் எஜிப்டை (Aedes Aegypti) எனப்படும் கொசு ரகமே டெங்கு காய்ச்சலைப் பரப்புகிறது. இதன் கருப்பு உடலிலும் நீளக் கால்களிலும் ஆங்காங்கே வெண்கோடுகள் அமைந்திருக்கும்.
இந்தக் கொசு நன்னீரில் முட்டை இடக் கூடியது. பெண் கொசுக்கள் மட்டுமே ரத்தத்தைக் குடித்து நன்னீரில் முட்டையிடும். இந்த கொசுப்புழுக்கள் நீர்ப்பாசியை சாப்பிட்டு பல்கிப்பெருகும்.
![]() |
நமது வீட்டில் உள்ள தண்ணீர் நிரம்பிய வாளி, குடம், குளியலறை டப் ஆகியவற்றில் இந்த டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும்.
இந்த ரகக் கொசுக்கள் சூரியன் உதித்து இரண்டு மணிநேரத்துக்குப் பின்னர், அதாவது காலை 8 மணிக்கு அதிகமாக நம்மைக் கடித்து ரத்தம் உறிஞ்சும். அதேபோல சூரிய அஸ்தமனத்துக்கு சில மணிநேரம் முன்னர் விழிப்புடன் இருக்கும்.
டெங்கு கொசுக்கள் நமது கை முஷ்டிகளில் அதிகமாகக் கடித்து ரத்தம் உறியும். அப்போது நமக்கு டெங்கு வைரஸையும் செலுத்திவிட்டுச் செல்லும்.
இதனால் விட்டுவிட்டு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு, கை, கால் வலி, இருமல், சளி ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையில் டெங்கு பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
இந்தக் கொசுக்களை ஒழிக்க தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும். வீட்டின் அருகே தண்ணீர் தேங்க விடக்கூடாது.
![]() |
தொட்டியில் பூச்செடிகள் வளர்ப்போர் அதிக தண்ணீரை தொட்டியில் ஊற்றக் கூடாது. பூத்தொட்டிகளில் இந்தக் கொசு எளிதில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். வீட்டைச் சுற்றி எங்கும் மழைநீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
துணிகள், படுக்கை ஆகியவற்றின் அடியில் வசிக்க இந்த கொசுக்கள் விரும்பும். எனவே துணிகள் இடையே அந்துருண்டை போட வேண்டும். படுக்கையை அவ்வப்போது தட்டிப்போடவேண்டும்.