/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
வீடு பராமரிப்பு
/
கனவு இல்லத்தில் நீர்கசிவா?- தடுப்பது அவசியம்...!
/
கனவு இல்லத்தில் நீர்கசிவா?- தடுப்பது அவசியம்...!
ADDED : ஆக 28, 2023 01:27 PM

நம் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கனவுகளில் ஒன்று சொந்தமாக வீடு கட்டி அதில், வாழ வேண்டும் என்பதே. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வாடகை வீட்டில் இருப்பவர்களின் ஏக்கமாகவே இருக்கிறது. இப்படி ஏக்கத்துடன் இருப்பவர்கள் கடன், சேமிப்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்து ஆசை ஆசையாய் வீட்டை கட்டுகின்றனர். ஆனால் அப்படி கட்டும் கனவு வீடுகளில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் ஒன்று தான் சுவரில் நீர்கசிவு பிரச்னை.
சுவர்களில் ஏற்படும் நீர்கசிவை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் சில ஆண்டுகளில் சிமென்ட் பூச்சுகள் அனைத்தும் பெயர்ந்து விடும். குறிப்பாக குளியலறை, சன்சைடு, மாடிப்படி சுவர்கள், கான்கிரீட் கூரை, மாடி தண்ணீர் தொட்டி உள்ள இடங்களில் ஈரம் கசிவதை பார்க்கலாம். இதை தடுக்க பின்வரும் வழிமுறைகளை செய்வது அவசியமாகும்.
சுவர் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மணலில் உள்ள களிமண் கட்டிகள் கலவையுடன் சேர்ந்து கான்கிரீட் வழி ஈரத்தை கடத்தும். அவ்வாறு ஏற்படாமல் இருக்க மணலில் உள்ள களிமண் கட்டிகளை அகற்ற வேண்டும். கான்கிரீட் மேற்கூரை அமைத்த பின் மொட்டை மாடியில் தட்டோடுகள் பதிக்கலாம். தட்டோடுகள் தரமாக இல்லை என்றால் கான்கிரீட் வழி தண்ணீர் இறங்கும். குளியல் அறையில் சுவற்றுக்குள் பதித்த தண்ணீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் அது சுவற்றில் இறங்கும்.
தரமில்லா செங்கல்களால், சமையல், படுக்கை அறை சுவர்களில் ஈரம் கசியும். வீடு கட்டுமான பணிக்கு சுட்ட செங்கல் தான் பயன்படுத்த வேண்டும். செங்கல் பயன்படுத்துவதற்கு முன் தண்ணீரால் நனைத்து கட்டுமானத்திற்கு பயன்படுத்த வேண்டும். தரமற்ற, பச்சை செங்கலாக இருந்தால் தண்ணீரிலேயே கரையும், எடை அதிகரிக்கும்.
மொட்டை மாடியில் இருந்து கசியும் ஈரம் கட்டடத்தின் மேற்கூரையை காலப்போக்கில் பாதிக்கும். கான்கிரீட்டில் உள்ள இரும்பு கம்பிகளில் ஈரம் இறங்கினால் எளிதில் துருப்பிடிக்கும். நாளடைவில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழும். இதை தடுக்க நீர் தடுப்பு சிமென்ட் கலவையை மொட்டை மாடியில் பூச வேண்டும்.
அதேபோல் வீட்டின் உட்புற கைப்பிடி சுவரிலும் மேற்பூச்சு பூசும் முன் பூசலாம். மாடிப்படிகள், கைப்பிடிசுவர் கான்கிரீட்டும் சேரும் இடம், தண்ணீர் தொட்டி கட்டும்இடம் நீர் தடுப்பு சிமென்ட் கலவையை பூசலாம்.சன்சைடு உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காதபடி வாட்டம் வைத்து கட்ட வேண்டும்.
இதை தவிர தற்போது மார்கெட்டில் நீர் கசிவை தடுக்க பல்வேறு வேதிப்பொருட்கள் அடங்கிய பூச்சுகள் கிடைக்கின்றன. அவற்றை தகுந்த அறிவுறுத்தலின் பேரில், கைதேர்ந்த கட்டுமான் ஊழியர்களை வைத்து சரியான அளவுகளில் பூச வேண்டும். அப்படி செய்தால் நீர்கசிவு பிரச்னையை சரிசெய்யலாம்.
ஆனால் இந்த பூச்சுகள் அதிக காலத்திற்கு பலன் தராது. குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே இந்த பிரச்னையில் இருந்து சரிசெய்யும் என்பதால், நாம் சுவர்களை கட்டும்போது மிகவும் கவனமாக கட்ட வேண்டும். தரமான செங்கல், மணல், சிமென்ட், உள்ளிட்டவற்றை பார்த்து வாங்கி, சரியான அளவுகளில் கட்டுவது அவசியமாகும்.