PUBLISHED ON : ஏப் 11, 2021

சிவகங்கை சீமை திருவேடகத்தில் வாழ்க்கைப்பட்டவர் இந்த சந்தானலட்சுமி.
'சொந்த வீடு, மாடு, வயக்காடுன்னு ராசாத்தி கணக்கா வாழ்ந்தவ நானு! கடந்த 10 வருஷமா, திருப்பூர் பல்லடத்துல ஒத்தை அறை ஓட்டு வீட்டுல வாடகைக்கு இருக்குறேன். வீட்டுக்காரருக்கு வயசாயிடுச்சு; பேரனுக்கு மூளை வளர்ச்சி இல்லை; ரெண்டு பேரையும் நான்தான் பார்த்துக்கிறேன்!' - 60 வயது சந்தானலட்சுமி பாட்டியின் வார்த்தைகளில் வறுமையை மீறி வாழ்க்கையை வளைத்துப் பார்க்கும் உறுதி!
வலியெல்லாம் சுகமே
என் வீட்டுக்காரரு 'காடே கதி'ன்னு கிடப்பாரு; வெற்றிலை, நெல் விளைச்சல்னு அமோகமா இருந்தது. 'வீடே கதி'ன்னு கிடந்த நான் இரண்டு ஆண், இரண்டு பொண்ணு பெத்து, நல்லா வளர்த்து குடும்பத்தை பார்த்துக்கிட்டேன். வெள்ளம், வறட்சின்னு அடுத்தடுத்து வந்ததுல எல்லா வருமானமும் போயி பிழைப்புக்காக சிவகங்கையை விட்டு வந்துட்டோம். எங்க 40 வருஷ மண வாழ்க்கையில ஒரு சண்டை கிடையாது. அவர் கோபப்பட்டாலும் அமைதியா வாசல்ல உட்கார்ந்துட்டு கால் மணி நேரம் கழிச்சு வீட்டுக்குள்ளே வருவேன்; எல்லாம் சரியாயிடும்!
விதி விளையாட்டு
பேத்திகள்; கொள்ளு பேத்திகள்னு 10 பேரு. இளைய மருமகள் மூலமா ஒரு பேரன். பிறந்த கொஞ்ச நாள்லேயே அவனுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு; ஒன்றரை மாத சிகிச்சைக்கு அப்புறம் மூளை வளர்ச்சி இல்லாம, தண்டுவடம் பாதிச்ச குழந்தையா திரும்ப கிடைச்சான். வேதனை தாங்க முடியாம நெருப்புக்கு தன்னை கொடுத்துட்டா மருமக! பேரன் 10 மாச குழந்தை. மறு வருஷமே மறு திருமணம் செஞ்சுக்கிட்ட மகன் இப்போவரைக்கும் எங்க இருக்கான்னு தெரியலை!
அம்மாவான பாட்டி
எங்க குலசாமி 'முனீஸ்வரன்' பேர்தான் என் பேரனுக்கு. 80 சதவீத மாற்றுத்திறனாளியான அவனுக்கு இப்போ 13 வயசு. 'கொரோனா'வுக்கு முன்னே வரைக்கும் சிறப்பு வகுப்புக்காக ஒரு கி.மீ., தொலைவுக்கு அவனை தோள்ல சுமந்து போயிட்டு வருவேன். தினமும் அவன் துாங்குனதுக்கு அப்புறம்தான் எனக்கு துாக்கம்! 'அரசு மருத்துவ காப்பீடு' அட்டை அவனுக்கு கிடைச்சா நல்லாயிருக்கும்!
கடைசி ஆசை
ஊரடங்கு காலத்துல எனக்கு நெஞ்சு வலி; மரணப்படுக்கையில கிடந்தப்போ, நினைப்பு முழுக்க பேரன் மேலதான்! நான் மீண்டு வந்ததும் உதடு பிரிச்சு சிரிச்சு சந்தோஷப்பட்டான். அவன் என்னை நினைக்காமலா இந்த உயிர் பிழைச்சிருக்கும்னு நினைக்கிறீங்க; 'அப்பாயி'ன்னு அவன் ஒரு தடவை கூப்பிடணும்; அதை கேட்டுட்டுதான் இந்த உயிர் போகணும்.
பாட்டி சொல்லை தட்டாதே!
ஆத்தா... கடவுளோட பிழையை திருத்த முயற்சி பண்ணுங்க; 'கருணைக் கொலை'ன்னு தீர்ப்பு எழுதாதீங்க!
