PUBLISHED ON : ஏப் 30, 2023

சிலருக்கு சில காரணங்களால் ஏதேனும் ஒரு வழியில் சமூக நடைமுறைகளோடும், யதார்த்தத்தோடும் முட்டி மோத வேண்டியிருக்கிறது! பழையதை துடைத்தெறிவது, புதியதை உருவாக்குவது, இழந்ததை மீட்பது தான் அந்த மோதலின் நோக்கம்!
திருநெல்வேலி, ராதாபுரம், வடலிவிளை கிராமத்தின், 'இளவட்டக்கல் துாக்கும் போட்டி'யில் வென்றிருக்கும் 39 வயது ராஜகுமாரிக்கும் இந்நோக்கம் உண்டு!
10 - 14 வயதில்
அப்பாவுக்கு குடிப்பழக்கம்; அம்மாவோட சண்டை போட்டு சாப்பாட்டை எல்லாம் தெருவுல அவர் வீசி எறியுறதால குடும்பமே பட்டினியா கிடப்போம்! ஆனா, அந்த மன இறுக்கத்துலேயும் என் வயசு பிள்ளைகளோட ஓட்டப் பந்தயம் விடுறது, கபடி ஆடுறதுன்னு நான் நானா இருப்பேன்!
15 - 17 வயதில்
அடிகுழாய் மூலமா தண்ணி அடிச்சு குடம் நிரப்பி, காலையில இருந்து சாயங்காலம் வரை செடிகளுக்கு தண்ணி ஊத்தினா 30 ரூபாய் கிடைக்கும்! வேலை இல்லாத நாட்கள்லதான் பள்ளிக்கூடம் போக விடுவாங்க; இப்படித்தான் 8ம் வகுப்பு வரை படிச்சேன்! வேலைக்கு போகாம கபடி ஆடி அம்மாகிட்டே அடி வாங்கினதும் உண்டு!
18 - 23 வயதில்
கோவையில 70 ரூபாய் கூலிக்கு ஒரு கயிறு மில்லுல சேர்த்து விட்டாங்க! கஞ்சி குடிச்சுட்டு, வெயில் சுடுற புழுதி மண்ணுல ஆட்டம் போட்டுட்டு இருந்த என்னால அங்கே இருக்க முடியலை! 'மாசத்துக்கு ஒருதடவை வீட்டு ஆளுகளோட போன்ல பேசலாம்'ங்கிற விதி கொடுமையா இருந்தது. விளையாட்டு என்கிட்டே இருந்து விலக ஆரம்பிச்ச தருணம் அது!
24 - 34 வயதில்
'கை, கால் இல்லாம இருந்தாலும் பரவாயில்லை; குடிப்பழக்கம் இருக்கவே கூடாது!' - இதுதான் என் வாழ்க்கை துணைக்கு நான் வரையறுத்த தகுதி. 23 வயசுல கல்யாணம்; ஒரு மகன், 2 மகள். குடும்ப பொறுப்புகளோட நான் திருப்தியா இருந்த நேரத்துலதான், 'இளவட்டக்கல் துாக்கும் போட்டி'யில முதன்முறையா எங்க ஊர் பெண்களும் கலந்துக்க ஆரம்பிச்சாங்க. மனசுக்குள்ளே, இளவயசு ராஜகுமாரி முழிச்சுக்கிட்டா!
இதற்குப்பின்... 45 கிலோ ஆட்டுக்கல் உரலை ஒரு நிமிடத்தில் 11 முறை துாக்கிப் போட்டது, 60 கிலோ இளவட்டக்கல்லை 11 முறை தலையை சுற்றி துாக்கி போட்டது, கிராம பெண்கள் 2 பேருடன் தெலுங்கானா சென்று இளவட்டக்கல் துாக்கி பெருமை பெற்றது என, ராஜகுமாரியின் சாதனைகள் தொடர்கின்றன!
ராஜகுமாரி 39 வயதில்
இன்னும் நிறைய ஜெயிக்கணும்னு ஆசையா இருக்கு; இது ஏன்னு தெரியலை!
ஏனெனில்... ராஜகுமாரி போன்றோருக்கு, சில காரணங்களால் ஏதேனும் ஒரு வழியில் சமூக நடைமுறைகளோடும், யதார்த்தத்தோடும் முட்டி மோத வேண்டியிருக்கிறது.
ஆசைகள் 1000* எங்க ஊருக்கு மைதானம் வேணும்* கார் வாங்கணும்* விமான பயணம் பண்ணணும்
