தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/காமெடி: அன்றும், இன்றும் - நடிகை சச்சு

காமெடி: அன்றும், இன்றும் - நடிகை சச்சு

காமெடி: அன்றும், இன்றும் - நடிகை சச்சு


PUBLISHED ON : ஜன 29, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாங்கள் நடிப்பு துறைக்கு வந்த காலத்தில் கதையிலேயே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்குவர். பொம்மலாட்டம், சுமதி என் சுந்தரி, கலாட்டா கல்யாணம் போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். முழு நீள நகைச்சுவை படங்களும் வந்தன. அதன் பின், தனியாக காமெடி டிராக்கை சேர்த்த காலம் உண்டு.

ஒரு சீசனில், நகைச்சுவை ஜோடிகளில் நானும் சுருளி ராஜனும் பாப்புலராக இருந்தோம். அப்போது, வெளியான ஒரு படத்தில் கதையும், படமும் சீரியஸாகவே நகரும்; நகைச்சுவை காட்சிகளே இல்லை. அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வகையில், மீண்டும் மீண்டும் ரசிகர்கள் தியேட்டருக்கு வர வேண்டும் என, மதுரை வினியோகஸ்தர் நினைத்தார்.

நானும் சுருளியும் இணைந்து காமெடி டிராக்கை உருவாக்கி, சென்சார் வாங்கி படத்தில் இணைத்தார். அவர் நினைத்தபடியே, படத்தில் வசூல் அதிகரித்தது. இதை அறிந்து, மற்ற வினியோகஸ்தர்களும் அந்த காமெடி காட்சிகளை வாங்கி சேர்த்தனர். என்.எஸ். கிருஷ்ணன், சாரங்கபாணி அண்ணா, காளிரத்தினம் போன்றோர் இருந்த காலத்தில், படம் முடிந்த பிறகும் கூட, காமெடி டிராக்கை சேர்த்துள்ளனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. நகைச்சுவைக்கு அதிபதி என்றால் அது என்.எஸ்.கே., தான்.

ஒரு முறை ஓடிய பின், 'இனி நகைச்சுவை காட்சிகள் திரையிடப்படும்' என தியேட்டர் வாசல்களில் அறிவிப்பு வைத்தால், ரசிகர்கள் மீண்டும் வந்து விடுவர். இப்போது விவேக், வடிவேலு, சந்தானம் போன்றவர்களுக்கு தனி குழு இருப்பது போல், அன்றும் என்.எஸ்.கே., போன்றோர் குழு வைத்திருந்தனர்.

தங்கவேலு போன்ற அந்த காலத்து நகைச்சுவை நட்சத்திரங்களை வளர்த்து விட்டது, என்.எஸ்.கே., தான். சக நகைச்சுவை நடிகர்கள் மீது எல்லாரும் அபிமானம் வைத்திருந்தோம். நானும் மனோரமாவும் தான், அதிக படங்களில் நாகேஷ், சுருளி போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தோம். நாகேசுடன் மனோரமா பத்து படம் நடித்தால், நானும் பத்து படம் நடிப்பேன்.

சொர்க்கம் படத்தில், நானே, அம்மா, மகள் என நான்கு வேடங்களில் நடித்தேன். பணக்கார குடும்பம் படத்தில், பல வேடத்தில் நாகேஷ் நடித்திருந்தார். அந்த மாதிரி யாரும் நடிக்கவில்லை. இன்றும் தலைமுறை கடந்து, காதலிக்க நேரமில்லை படத்தை பற்றி பேசுகின்றனர் என்றால், படம் அந்தளவு ரசிக்கும் படி, காமெடியோடு இருந்தது. இப்போது விவேக், சந்தானம் போன்ற பலரின் காமெடி நன்றாக இருந்தாலும், காலத்திற்கு கடந்து நிற்பது குறைவே.

முன்பு, சித்ராலாயா கோபுவும், ஸ்ரீதரும் இணைந்து நிறைய காமெடியை உருவாக்கினர். ஊட்டி வரை உறவு, சிவந்தமண் போன்ற பல படங்களை கூறலாம். கதையுடன் கூடிய காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். வீரப்பன், ஏ.எல். நாராயணன் உள்ளிட்ட பலர், காமெடி டிராக்கை சிரிக்க சிரிக்க உருவாக்கினர். சமையலில் கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டால் எப்படி வாசமுடன் இருக்குமோ அப்படித்தான் படங்களுக்கு காமெடி அவசியம்.

அன்று என்.எஸ்.கே. - மதுரம்; தங்கவேலு - சரோஜா காமெடி ஜோடி ஒருவரை ஒருவர் புரிந்து நடித்தனர். நடிப்பில் மட்டுமே போட்டி இருக்கும். இப்போதைய படங்களில் கோவை சரளாவுக்கு பின் காமெடி ஜோடி பெரிதாக பேசப்படவில்லை. நானும் மனோரமாவும் நிறைய படங்களில் மோதி இருப்போம். வெளியே வந்து அதை ரசித்து பேசுவோம். அதை மெருகூட்டவும் செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

65 ஆண்டு அனுபவம்



கதாநாயகி, குணச்சித்திரம், நகைச்சுவை பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் கலக்கியவர் சச்சு. குமாரியாக அறிமுகமாகி, குமரியாகவும், பாட்டியாகவும், முன்று தலைமுறை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் உட்பட பல மொழிகளில், 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 65 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பயணித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us