PUBLISHED ON : ஜன 25, 2021

'மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி வரை, 130 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணம் செய்த கணவர்!' - ஏப்ரல் 2020ல் அறிவழகன் - மஞ்சுளா தம்பதி குறித்து இப்படியொரு செய்தி வெளிவந்தது நினைவிருக்கிறதா; உங்களின் அந்த நிமிடம் நெகிழ்வுற காரணமான தம்பதியின் இன்றைய நிலை...?
அவர்களின் வாழ்க்கையில் இப்போது ஒரு பெரும் மாற்றம். 60 வயது அறிவழகன், 40 வயது மஞ்சுளா மற்றும் அவர்களின் மனநலம் குன்றிய 12 வயது மகன் என மூவரும் ஒன்றாக உறங்கும் அந்த கூரை வேய்ந்த வீட்டின் கோரைப்பாயில், ஆகஸ்ட் 22, 2020 முதல் மஞ்சுளா இல்லை... இனி எப்போதும் இல்லை!
அய்யா... உங்க மனைவியோட இறுதி நிமிடங்கள் ஞாபகமிருக்கா?
அந்த நினைப்பு மட்டும்தான் மனசுல கிடக்குது; அது ஒரு ஜெயில் மாதிரி இருக்கு!
உங்ககிட்டே அவங்களோட கடைசி நேரத்தைப் பற்றி கேட்டேன்?
மன்னிக்கணும்... இப்போ எதையும் என்னால சரியா புரிஞ்சுக்க முடியுறதில்லை! அவளுக்கு கன்னத்துல புற்று இருந்தது. 'கீமோ' சிகிச்சையில தலைமுடி, பல் எல்லாம் உதிர்ந்திட்டதால பழச்சாறு மட்டும்தான் ஆகாரம். ஏதாவது வேணும்னா என் கையை புடிச்சு இழுப்பா. அன்னைக்கு விடியக்காலை 4:00 மணி இருக்கும்; என் கையை இழுத்தா! மேல் மூச்சு கீழ் மூச்சுன்னு சிரமப்பட்டுட்டு இருந்தா; பக்கத்துல படுத்திருந்த பிள்ளையைப் பார்த்து கை நீட்டுனா; எனக்கு புரிஞ்சிருச்சு; துாங்கிட்டிருந்தவனை துாக்கி அவகிட்டே காட்டினேன். அவன் முகத்தை நல்லா உத்துப் பார்த்தா! அப்புறம் என் பக்கமா கண்ணை உருட்டி திருப்ப முயற்சி பண்ணினா... அவளால முடியலை; அவ்வளவுதான்... உசுரு அடங்கிருச்சு!(அழுது முடித்து, கண்ணீர் துடைத்து, இளைப்பாறிய பின்...)
வயசு வித்தியாசம் அதிகமா இருக்குதே; உங்க திருமண பந்தம் எப்படி ஆரம்பமாச்சு?
நான் கூலி வேலைக்குப் போறவன். என் முதல் மனைவி மாரடைப்புல இறந்ததுக்கு அப்புறம் தனியா இருந்தேன். அப்பதான் மஞ்சுளா குடும்பம் அறிமுகமாச்சு. ஊரார் முன்னிலையில கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நான் யாரு, என்ன வருமானம்னு எதுவும் தெரியாம நம்பிக்கையோட வந்தா. இன்னைக்கு அவளை என்னால காப்பாத்த முடியாம போயிருச்சு!
அவங்க இல்லாத இந்த ஐந்து மாதம்...?
அந்த பாழாப்போன புற்றுநோயினால இனி அவளுக்கு அவஸ்தை இல்லைன்னு நினைக்குறப்போ மனசுக்கு சமாதானம்; ஆனாலும், என் மஞ்சுளா என்கூட இல்லையே!
இனிமே...?
தெரியலை; வேலைக்கு போனாத்தான் வருமானம். ரேஷன் அரிசியை வடிச்சுக்கிறேன்... அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க குழம்பு தர்றாங்க! உயிர் போறதுக்குள்ளே இந்த பயலுக்கு ஒரு வழியைப் பார்த்துடணும்.
