PUBLISHED ON : மார் 08, 2021

உங்களுக்கு பிடித்த இசைக்கருவி எது; இசைஞானி இளையராஜாவிடம் கேட்கப்பட்ட இக்கேள்விக்கு அவரது பதில்...
'மனம்'
ஆழ்ந்து யோசித்தால் அதுதான்
நிஜம்; மனதில் உதயமாவது விரல்கள் வழி பயணித்துதானே ஹார்மோனியத்தை மீட்டுகிறது. உயிர் மீட்டும் இப்பணிக்கு சற்றும் குறைவில்லாதது ஈஸ்வரியின் பணி; சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகமே இவரது பணியிடம்.
பணி துவக்கம்: 1993ம் ஆண்டு
முதல் களம்: அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு.
பதவி: செவிலி
துறை அனுபவம்: 28 ஆண்டுகள்
என்னை பாதித்த மனங்கள்
இத்தனை ஆண்டு அனுபவத்துல மனநலம் குன்றிய நிறைய மனிதர்களை கடந்து வந்திருக்கேன். அதுல பல பேர் பூரணமா குணமாகி இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கிறாங்க. ஆனா, சராசரி மனிதர்கள்கிட்டே தான் இன்னமும் மாற்றம் வரலை. மனநலம் தவறியவர்களை 'போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்'னு ஒதுக்கி வைக்கிறது, பைத்தியம்னு திட்டுறது... இப்படி சமூக மனநலன் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கு!
காப்பகத்துல தங்கியிருந்து சிகிச்சை எடுத்துட்டு இருந்த ஒரு பெண்ணை, சில நாட்கள் அவங்க வீட்ல தங்கியிருக்கச் சொல்லி அனுப்பி வைச்சோம். ஆனா, வீட்டுல இருந்தவங்க அந்த பெண்ணை தெருவுல கொண்டு வந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல யாரை மனநலம் தவறியவர்னு சொல்றது?
உங்க மனசுல பிரச்னைன்னா எப்படி சரி பண்ணுவீங்க?
அறுவை சிகிச்சை நிபுணரா இருந்தாலும் தனக்குத் தானே அறுவை சிகிச்சை பண்ணிக்க முடியுமா என்ன; எங்களுக்கும் சிகிச்சை தேவைப்படும்; ஒரே வித்தியாசம் என்னன்னா... சிகிச்சைக்கு எங்க மனசு வேகமா ஒத்துழைக்கும்!
என்னை நிரூபிக்கும் இடம்
சிகிச்சைக்காக காப்பகத்துல இருக்குறவங்களை எழுப்பி, குளிப்பாட்டி, உடை மாற்றி, உணவு கொடுத்து, மருந்து தர்றது வரைக்கும் ரொம்ப கூர்மையா செயல்பட வேண்டிய பணி என்னுடையது! சிகிச்சை எடுத்துட்டு இருக்குறவங்க சில நேரங்கள்ல மூர்க்கமா நம்மளை தாக்குவாங்க. இதை அவங்க உணர்ந்து செய்றதில்லைங்கிற புரிதல் இருந்தாலும் அந்தசமயத்துல எதிர்வினையாற்றச் சொல்லி மூளை துாண்டும். இந்த இடத்துலதான் மனநல மருத்துவமனை செவிலியா நான் ஜெயிக்கணும்!
உங்கள் பார்வையில் எது நிர்வாணம்?
ஆடையற்ற மனசுதான் என் பார்வையில நிர்வாணம்! சிகிச்சையில இருக்குறவங்களை தினசரி குளிப்பாட்டுற தருணத்துல இதை நான் முழுமையா உணர்றேன்.
சுருக்
ஈஸ்வரி: 'ஏன் மனநல காப்பக பணியிலேயே இருக்கணும்; பொது மருத்துவமனைக்கு மாறிடலாமே' - இந்த அறிவுரையில் உள்ள வெறுப்புணர்வு பெரும் வலி தருகிறது.
