PUBLISHED ON : மார் 20, 2021

மஞ்சுளா கணேசன் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை மதுரவாயலில்தான்; ஆனால், அந்த இடத்தை விட்டு தற்போது தொலைவாய் நகர்ந்திருக்கிறார்.
என்ன காரணம் மஞ்சுளா?
'மதுரவாயல்ல கிட்டத்தட்ட 150 தெரு நாய்களுக்கு தினமும் சாப்பாடு போட்டுட்டு இருந்தேன். அடிபட்ட நாய்களுக்கு சிகிச்சை தர்றது, தடுப்பூசி போடுறதுன்னு நான் இயங்கிட்டு இருந்தது சிலருக்குப் பிடிக்கலை. 'இவளாலதான் தெரு நாய்கள் அதிகமாகுது'ன்னு நாய்கள் மேலேயும் என் மேலேயும் தாக்குதல் நடத்தினாங்க. அதான், 21 ஆண்டுகள் வாழ்ந்த இடத்தை விட்டு நகர்ந்துட்டேன்.
இதற்கெல்லாமா பயப்படுறது?
இது பயம் இல்லை; தற்காப்பு! எனக்கு பயம்னா நான் இடத்தை மாத்தியிருக்க மாட்டேன்; இப்படி இயங்குறதையே நிறுத்தியிருப்பேன்.
சபாஷ்; நாய்கள் மேல எப்படி இவ்வளவு அன்பு?
'நாய்கள் மேல மட்டும்'னு என் அன்பை சுருக்கிட முடியாது! 'பிராய்லர்' கோழிகளை அடைச்சுட்டுப் போன வண்டி சக்கரத்துல கோழி தலை சிக்குனதைப் பார்த்து போலீஸ்ல புகார் கொடுத்தவ நான்!
தன் 11 வயது முதல் வாயில்லா ஜீவன்களிடம் அன்பு பாராட்டி வரும் மஞ்சுளா, இதுவரை 500க்கும் அதிகமான நாட்டு நாய்களை பாதுகாத்து தத்து கொடுத்திருக்கிறார். தன் விருப்பப்படி இயங்க ஐ.டி., பணி தடையாக இருந்ததால் அதிலிருந்து விலகி 'கேட்டரிங்' துவக்கியவர், அந்த வருமானத்தில் இருந்தே இந்த ஜீவன்களுக்கு செலவு செய்து வருகிறார்.
மனிதனுக்கு மனிதன் உதவ தயங்குற இந்தகாலத்துல...
ப்ளீஸ்... முதல்ல மனிதப் பிறவியை மட்டும் உயர்த்திப் பார்க்குறதை நிறுத்துவோம். எல்லாமே உயிர்தான்; இன்னும் சொல்லப்போனா மற்ற ஜீவன்கள் எல்லாம் மனிதர்களை காட்டிலும் நன்றியுள்ளவை! நாம தயிர் சாதம் கொடுத்தாலும், பிரியாணி போட்டாலும் அதுகளோட அன்பு மாறாது!
'எப்போ கல் வருமோ'ங்கிற பயத்தோட குட்டிகளுக்கு பால் தர்ற நாய் என் பார்வைக்கு அம்மாவா தெரியுது; என் காலை சுத்துற நாய்களை என் குழந்தைகளா உணர்றேன்; என் பார்வையில எல்லாமே உயிர்தான்!
உண்மைதான்; தான் வளர்த்து தத்து கொடுக்கும் எந்த உயிருக்காகவும் மஞ்சுளா இதுவரை பணம் வாங்கியதில்லை! மாறாக, உறவை பெற்றுச் சென்றவர்களிடம் மாதம் தோறும் அதன் ஆரோக்கியம் குறித்து விசாரிக்கிறார்; அதை உறுதிப்படுத்த புகைப்படம் பெறுகிறார்.
'உயிர்களிடத்தில் அன்பு வேணும்; தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்!' - மகாகவி.
மஞ்சுளா கணேசனின் புதுப்புது அர்த்தங்கள்!
அன்பு?
ஊற்று
மனிதம்?
தேன்
நாய்?
பாசம்
